நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றதற்கு, இந்தியர்களைவிடவும் பாகிஸ்தானியர்களே கொண்டாடி வருகின்றனர். இதற்கு காரணம் நம்மீது உள்ள அக்கறை என்று மட்டும் சொல்லிவிடக்கூடாது. அதற்குமேலும் ஒரு காரணம் உள்ளதப்பா…
டி20 உலகக்கோப்பை போட்டி ஜூன் 2ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் இன்னும் மூன்று குரூப்கள் உள்ளன. லீக் சுற்றின் முடிவில் இந்த ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகளே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
பாகிஸ்தான் அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் பிற அணிகளின் வெற்றி, தோல்விகள் அந்த அணிக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற நிலை உள்ளது.
அதற்கு முதலில் அமெரிக்காவின் ரன் ரேட் பாகிஸ்தானின் ரன் ரேட்டைவிட குறைந்து இருக்க வேண்டும். அதேபோல், இந்திய அமெரிக்கா அணியின் குரூப் போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டும். இந்த இரண்டும் நடந்தால், பாகிஸ்தான் அணிக்கு சாதகமான நிலை ஏற்படும். இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, அமெரிக்காவின் நெட் ரன் ரேட் பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட்டை விட கீழே சரிந்தது.
தற்போதைய நிலவரத்தின்படி, அமெரிக்கா அணி மூன்று போட்டிகளில் விளையாடி, அதில் இரண்டு வெற்றி என நான்கு புள்ளிகளுடன் உள்ளது. அந்த அணியின் ரன் ரேட் 0.127 ஆக உள்ளது. பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகள் உடன் 0.191 என்ற நெட் ரன் ரேட்டுடன் உள்ளது.
இதனையடுத்து அமெரிக்கா அணியும் பாகிஸ்தான் அணியும் அயர்லாந்து அணியுடன் மோத வேண்டும். அந்தப் போட்டிகளில் அமெரிக்க அணி தோல்வி அடைந்து, பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும்.
இப்போது புரிகிறதா? ஏன் பாகிஸ்தான் அணி நமது வெற்றியை இந்த அளவு கொண்டாடுகிறது என்று… எல்லாம் காரணமில்லாமலையா??