Paris Olympic 2024
Paris Olympic 2024https://olympics.com

உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் இன்று தொடக்கம்!

Published on

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று (26.07.2024) தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கு முன் 1900 ஆண்டிலும்,1924ம் ஆண்டிலும் ஒலிம்பிக்ஸ் பாரிஸ் நகரத்தில்தான் நடைபெற்றது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸுக்கு இது நூறாண்டு என்று சொல்லலாம். இந்தத் தருணத்தில் பாரிஸ் நகரத்தில் மீண்டும் ஒலிம்பிக்ஸ் நடைபெற இருப்பது பாரிஸ் மக்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். இதுபோல ஒரே நாட்டில் மூன்று முறை ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறுவது ஓர் அரிய விஷயம்தான். இதற்கு முன் இந்தப் பெருமை லண்டனுக்குத்தான் இருந்தது. பிரான்ஸ் நாட்டு ஒலிம்பிக்ஸ் சங்கம் இந்த போட்டிகளை நடத்த 75,000 கோடி செலவாகும் எனக் கணக்கிட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்ஸின் அதிகாரபூர்வமான சின்னமாக வழக்கமான பறவை அல்லது விலங்கைத்தான் அறிமுகப்படுத்துவார்கள். இந்த ஒலிம்பிக்ஸிக்கும் சின்னம் அறிவித்துள்ளார்கள். அது ஒரு சிவப்பு நிற தொப்பி. அதற்கு ஃப்ரிஜியன் என்று பெயர். பிரான்ஸ் நாட்டில் நடந்த, வரலாற்றில் இடம் பெற்ற பிரெஞ்சு புரட்சியின்போது நடந்த போராட்டத்தின் அடையாளமாக இந்த சிவப்பு நிற தொப்பி உருவகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து ஊனமுற்றோர்க்கான பாரா ஒலிம்பிக்ஸ் நடைபெறும். அதற்கும், ஃப்ரிஜியன் தொப்பிதான் அதிகாரப்பூர்வமான சின்னம். ஆனால், சின்ன வித்தியாசமாக மாற்றுத்திறனாளிகளை அடையாளப்படுத்தும் வகையில் அந்த தொப்பி ஒரு செயற்கை கால் கொண்டதாக இருக்கும்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 32 வகையான விளையாட்டுகளில் 329 விதமான போட்டிகள் நடைபெற உள்ளன. இவற்றில் 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் நல்லவர்களாக வளர கற்றுக்கொடுக்க வேண்டிய 10 நற்பண்புகள் தெரியுமா?
Paris Olympic 2024

ஒலிம்பிக்ஸில் பங்கேற்கவும், கண்டுகளிக்கவும் பிரான்ஸ் நாட்டுக்கு வருகைதரும் விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் தேவையான தகவல்களை அளிக்கவும், உதவிகள் செய்யவும் 45,000 வாலண்டியர்கள் களத்தில் இருப்பார்களாம்.

பல்வேறு போட்டிகளைக் காண்பதற்காக 1 கோடியே 34 இலட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகும் என்றும், ஒட்டு மொத்தமாக ஒரு கோடியே 53 இலட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸில் பாரிஸ் உட்பட 16 இடங்களிலும் பல்வேறு போட்டிகளை நடத்துவதால் பிரான்ஸுக்கு 3.5 பில்லியன் யூரோ அளவுக்கு பொருளாதார நலன்கள் கிடைக்கும் என பிரான்ஸ் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. ஒலிம்பிக்ஸ் திருவிழாவைக் கண்டு களிக்க நாமும் தயாராவோம்.

logo
Kalki Online
kalkionline.com