அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் பெங்களூரு அணியின் கேப்டன் பதிவியை கேட்டு அணி நிர்வாகத்திடம் பேசியதாக ரசிகர்கள் பகிர்ந்து வரும் செய்தி பொய் என்று ரிஷப் பண்ட் ரிப்ளை செய்து கொந்தளித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் ஆரம்பப்புள்ளி மெகா ஏலம்தான். இதில் ஒவ்வொரு அணியும் புது வீரர்களை எடுத்துக்கொள்வதும், பழைய வீரர்களை கொடுக்கவும் செய்து அணியை கட்டமைப்பார்கள். சில வீரர்களை மட்டும் ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக்கொள்ளலாம். அந்தவகையில் ரிஷப் பண்ட் சென்னை அணிக்கு வருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரிஷப் பண்ட் எந்த அணிக்கும் செல்லமாட்டார், டெல்லி அணியிலேயேதான் இருப்பார் என்று அணி நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது.
இந்தநிலையில்தான், பெங்களூரு அணி கேப்டன் டூ ப்ளஸி 40 வயதைத் தாண்டி விட்டதால், இவர் ஐபிஎல் தொடரில் நீடிக்கப் போவதில்லை என்றும், அடுத்த சீசனில் விளையாட வாய்ப்பில்லை என்றும் சொல்லப்பட்டது.
மறுபக்கம் மற்றொரு செய்தி பரவ ஆரம்பித்தது. அதாவது, பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் டூ ப்ளஸி நீடிக்கமாட்டார் என்பதால், அந்த இடத்தைப் பிடிக்க ரிஷப் பண்ட் திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்து பெங்களூரு அணி மேலாளரிடம் ரிஷப் பண்ட் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், சில அரசியல் காரணத்தினால் விராட் கோலிக்கு பிடிக்கவில்லை என்பதால், பண்ட்டின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் பரவின.
இதற்கு ரிஷப் பண்ட் எக்ஸ் தளத்தில் காட்டமாக பதிலளித்துள்ளார், “பொய் செய்தி... சமூக வலைதளங்களில் ஏன் பொய்யான செய்திகளை பரப்புகிறீர்கள்... புத்திசாலித்தானமாக நடந்து கொள்ளுங்கள். எந்த காரணமும் இல்லாமல் நம்பகத்தன்மையற்ற சூழலை உருவாக்காதீர்கள். இது போன்ற பொய் செய்திகள் வெளிவருவது முதல் முறையும் அல்ல... இது தான் கடைசி பொய் செய்தியும் அல்ல என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், இந்தப் பொய் செய்திக்கு பதிலளித்திருக்கிறேன். தயவு செய்து உங்களின் so called sources-ஐ சரிபாருங்கள். ஒவ்வொரு நாளும் அது மோசமாகிக்கொண்டே செல்கிறது. கொஞ்சம் ஓய்வெடுங்களேன்... இந்த செய்தி உங்களுக்கு மட்டுமல்ல, உங்களைப் போன்று பொய் செய்திகளைப் பரப்பும் அனைவருக்கும்தான்..." என்று பகிர்ந்துள்ளார்.