இன்றைய தேதியில், இந்தியா பேட்மிண்டனில் பெருமை கொள்ளும் அளவிற்கு சாதித்த ஜோடி சிராக் ஷெட்டி மற்றும் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி. செல்லமாக இவர்களை 'சாட்-சி' என்று அழைக்கிறார்கள். சமீபத்தில் நடந்த BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்கள்.
காலிறுதி போட்டியில் மலேசியாவின் ஆரோன் சியா - சோ வூய் யிக் ஜோடியை வீழ்த்தினார்கள். ஆனால் அரையிறுதியில் தோல்வி அடைந்ததால், சாட்-சி ஜோடி, இரண்டாவது முறையாக உலக சாம்பியன்ஷிப் வெண்கலப் பதக்கத்தோடு திருப்தியடைய வேண்டியிருந்தது.
சிராக் ஷெட்டி தற்போது அளித்த பேட்டியில், தாங்கள் அடைந்த இந்த வெற்றிக்கு பயிற்சியாளர் டான் கிம் ஹெர்-தான் காரணம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "பயிற்சியாளர் மீண்டும் வந்தது எங்களுக்கு மிகவும் நல்லது. எனக்கும் சாத்விக்-க்கும் அவர்தான் ஊக்கமாக இருந்தார். நாங்கள் இருவரும் விளையாட்டுக்கு புதியவர்களாக இருந்தபோது, அவர்தான் எங்களை ஒரு ஜோடியாக இணைத்தார். அவர் செல்வதற்கு முன் எங்களை உலகத்தர வீரர்களாக மாற்றினார். இப்போது நாங்கள் உலகளவில் நம்பர் ஒன் வீரர்களாக இருந்துள்ளோம், அதனால் அவருடைய பயிற்சியின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிட்டது" என்று சிராக் கூறினார்.
"இப்போது அவர் எங்களிடம், 'எது வேலை செய்கிறது, எது வேலை செய்யவில்லை' என்று விவாதித்து, அதற்கான கருத்துக்களைத் தெரிவிக்கிறார். எங்களின் பயிற்சி திட்டங்களை அவர்தான் முடிவு செய்கிறார். முன்பு நாங்கள் இளம் வீரர்களாக இருந்தபோது இப்படி இல்லை. இப்போது எங்களுக்குத் தேவையான சிறிய விஷயங்களை மட்டுமே சரிசெய்ய வேண்டியுள்ளது. அவரிடம் மீண்டும் பயிற்சி பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது." என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024-ல், டென்மார்க் பயிற்சியாளரான மதியாஸ் போவின் கீழ் சாட்-சி ஜோடி சரியாக விளையாடாததால், அவர்கள் டான் கிம் ஹெர் மீண்டும் திரும்ப வேண்டும் என்று கேட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று, டான் கிம் ஹெர் டிசம்பர் 2024-ல் மீண்டும் இந்திய இரட்டையர் பிரிவு பயிற்சியாளராக இணைந்தார்.