கிரிக்கெட்டில் இந்தியாவின் சுவர் என்று அழைக்கப்படுபவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் THE WALL என்று அழைக்கப்படுவதன் காரணம் குறித்து இப்பதிவில் காண்போம்.
டெஸ்டில் 13,288 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 10889 ரன்கள் என மொத்தமாக 24,208 ரன்களைக் குவித்திருக்கும் டிராவிட் அனைத்து வடிவங்களிலும் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.
உலக கிரிக்கெட்டின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களே பார்த்து அச்சப்பட்ட ஒரு வீரராக விளங்கிய டிராவிட், தன்னுடைய அசாத்தியமான தடுப்பு ஆட்டத்தால் "சுவர்" என்ற அடைமொழியை பெற்றுள்ளதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் பல எண்ணற்ற வித்தைகளையும் காட்டியுள்ளார்.
1.டெஸ்ட்டில் 30,000 பந்துகளை எதிர்கொண்ட ஒரே வீரர்
150 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய ஒரு பவுலரின் பந்தை பெரிய ஃபுட் வொர்க் எதுவும் இல்லாமல் நின்ற இடத்திலேயே தடுத்து நிறுத்தி விடுவார் ராகுல் டிராவிட். சுற்றியிருக்கும் ஃபீல்டர்களும் நகரவேண்டியதில்லை, பேட்ஸ்மேனும் நகரவேண்டியதில்லை, விக்கெட் கீப்பரும் நகரவேண்டியதில்லை,
150 கிமீ வேகத்தில் ஒவ்வொரு பந்தையும் வீசிவிட்டு, பவுலர் ஒருவர் மட்டும் ஓடி, சோர்ந்திருக்கும் போது, பவுண்டரிகளை விரட்டுவதில் வல்லவராக இருந்ததால் பெயருக்கு ஏற்றார் போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக பந்துகளை சந்தித்திருக்கும் ஒரே வீரர் என்ற உலக சாதனையை தன்வசம் வைத்துள்ளார் டிராவிட்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 31,258 பந்துகளை எதிர்கொண்ட ஒரே பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் தான். அதாவது கிட்டத்தட்ட 5210 ஓவர்களை அவர் ஒருவர் மட்டும் எதிர்கொண்டுள்ளார்.
2. கிரீசில் அதிக நேரம் பேட்டிங் செய்த வீரர்
ராகுல் டிராவிட் கிரீசில் இருக்கிறார் என்றால் "இந்திய ரசிகர்கள் வாங்க பொறுமையா சாப்பிட்டு டீ குடிச்சிட்டு வரலாம்" என்ற அளவிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்திருந்தார். தானும் அவுட் ஆகாமல், மறு முனையில் இருப்பவரையும் அவுட் ஆகாமல் பார்த்துக் கொள்வதில் வல்லவராக கிரீசில் அதிக நேரம் பேட்டிங் செய்த வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.
3. டக் அவுட் ஆகாமல் தொடர்ச்சியாக விளையாடியவர்
2000-2004 காலகட்டங்களில் 173 போட்டிகளில் தொடர்ச்சியாக டக் அவுட்டாகமல் இந்த சாதனையை ராகுல் டிராவிட் படைத்துள்ளார். இவருக்கு அடுத்த இடங்களில் 136 இன்னிங்ஸ்களுடன் சச்சின் டெண்டுலரும், 135 இன்னிங்ஸ்களுடன் அலெக் ஸ்டீவர்ட்டும் இருக்கின்றனர்.
ராகுல் டிராவிட்டின் இந்த 3 சாதனைகளே 'இந்திய கிரிக்கெட்டின் சுவர்' என்று அழைக்கப்பட போதுமான சான்றுகளாக இருக்கின்றன.