
இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தனது தொடக்க கால சினிமாவில் நிறைய ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து இருக்கிறார். கடின உழைப்பின் மூலமே இன்று விஜய், கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்திருக்கிறார். ஆனால், இவரின் தொடக்க கால சினிமா பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. சரியான பட வாய்ப்புகள் இல்லை; சில தயாரிப்பாளர்கள் இவரைத் தவிர்த்து வந்தனர். இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார் நடிகர் விஜய். இதிலிருந்து விடுபட விஜய் என்ன செய்தார்?
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் விஜய். தொடக்கத்தில் நடித்த சில படங்கள் தோல்வியைத் தழுவின. இருப்பினும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக முயற்சித்துக் கொண்டே இருந்தார். ஆனால், சில தயாரிப்பாளார்கள் 'இவனெல்லாம் ஒரு நடிகனா? முகமே சரியில்லை' என்று விஜய்யை குறை கூறினார்கள். இச்சமயத்தில் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானார் விஜய்.
யாராக இருந்தாலும் மன அழுத்தத்தில் இருக்கும் போது, அதிலிருந்து விடுபட சிறந்த வழி காமெடி வீடியோக்களைப் பார்ப்பது தான். விஜய்யும் அதையே தேர்வு செய்தார். தமிழில் மிகவும் புகழ்பெற்ற கவுண்டமணி செந்தில் காமெடிகளை அடிக்கடி பார்ப்பாராம். இதுமட்டுமின்றி விஜய் தனது காரிலும் கவுண்டமணி காமெடி சிடிக்களை வைத்திருந்தார். 'மனம் நொந்து விரக்தி அடையும் சமயங்களில் தன்னைத் தேற்றி, சந்தோஷமாக மாற்றியது கவுண்டமணி காமெடிதான்' என விஜய் சமீபத்தில் கூறினார்.
மிகவும் எதார்த்தமான நடிப்பில் அனைவரும் ரசிக்கும் படியான காமெடி காட்சிகளை சிறப்பாக நடித்தவர் கவுண்டமணி. இவருக்கு உறுதுணையாக செந்தில் கூட்டணி சேர்ந்தால் காமெடி சரவெடி தான். இன்று எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும், கவுண்டமணி செந்தில் கூட்டணிக்கு ஈடாகாது என்பது கோலிவுட்டும், ரசிகர்களும் அறிந்ததே.
இளைய தளபதி விஜய் மட்டுமின்றி, அனைத்து கதாநாயகர்களும் விரும்பும் காமெடி நடிகர்களின் பட்டியலில் கவுண்டமணி மற்றும் செந்திலின் பெயர்கள் தான் முன்னணியில் இருக்கும். விஜய் சோர்ந்து போகும் போதெல்லாம், அதிக நம்பிக்கையுடன் மீண்டும் முயற்சிக்க காரணமே கவுண்டமணி காமெடி தான் என்று கூட சொல்லலாம். யாரைப் பார்த்து மனதை சந்தோஷமாக மாற்றிக் கொண்டாரோ, அவருடனும் சில படங்களில் நடித்தார் விஜய்.
அன்று 'இவனெல்லாம் ஒரு நடிகனா' என்று கேட்டவர்கள், இன்று விஜய்யின் வளர்ச்சியைப் பார்த்து பிரம்மித்து நிற்கிறார்கள்.
அனைவரும் ஏதோ ஒரு சூழலில் மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடலாம். அச்சமயத்தில் அதையே நினைத்து வருத்தப்படாமல், அதிலிருந்து வெளிவரவே முயற்சிக்க வேண்டும். நமக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்தினால், தானாகவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு விடலாம். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக நடிகரான இளைய தளபதி விஜய்யை கூறலாம்.