இந்திய ஹாக்கி ரசிகர்களால் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த உலக ஹாக்கி ரசிகர்களால் இன்று வரை ரசித்து கொண்டாடப்படும் ஒருவர் தயான் சந்த் மட்டுமே.
அவரின் ஆட்டம் அந்த அளவுக்கு மிகவும் பிரபலமானது. ஹாக்கியில் கிரிக்கெட்டைப் போல ஸ்கோர் செய்தவர் இவர் மட்டுமே. 1932 இல் 37 போட்டிகளில் 133 கோல், 1934 -35 இல் 43 போட்டிகளில் 201 கோல் என இவர் அசுரத்தனமாக கோல் அடிப்பதை பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன், 'நீங்கள் ஹாக்கி வீரர் என்று சொல்லி ஒரு கிரிக்கெட் வீரரை அணியில் சேர்த்து விட்டீர்கள்! இவர் ரன்களை போல அல்லவா கோல்கள் அடிக்கிறார்!' என்று சொல்லி புகழ்ந்து இருக்கிறார்!
சில வெளிநாட்டு பத்திரிக்கைகள் 'இவர் மட்டையில் பசையை தடவி வைத்திருப்பார் போலும். பந்து அவர் மட்டையுடனே செல்கிறதே! என புகழ்ந்து தள்ளின.
ஆஸ்திரிய நாட்டில் இவர் நான்கு கைகளுடன் இருப்பது போல சிலை வைக்கப்பட்டு உள்ளது. அந்த நான்கு கைகளும் தலா ஒரு ஹாக்கி மட்டையை கையில் பிடித்த வண்ணம் இருக்கும்!
1905 இல் பிறந்து 1979 இல் மறைந்த தயான் சந்தின் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 தான் நம் நாட்டின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது!
ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி என அந்தக் காலத்து பத்திரிக்கைகள் இவரை வர்ணித்தன. இவர் ஹாக்கியின் கடவுள் என்றும் வர்ணிக்கப்படுகிறார். இவரைப்போல அசுரத்தனமாக எந்த வீரரும் இன்று வரை ஹாக்கி ஆடியதில்லை.
ஹாலந்து நாட்டில் இவரது ஹாக்கி மட்டையை உடைத்து அதில் காந்தம் ஏதும் வைத்து இருக்கிறாரா என சோதித்து பார்த்திருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்!
ஒருமுறை வளைதடிப் பந்தாட்டமொன்றில் என்ன முயன்றும் தயான் சந்தினால் கோல் அடிக்க முடியவில்லை. பலமுறை தவறிய பின்னர் தயான் சந்த் நடுவரிடம் இரு கோல் வலைகளுக்கும் இடையே உள்ள தூரம் சரியில்லை என்று முறையிட்டார். அளவெடுத்துப் பார்த்தபோது பன்னாட்டு விதிகளின்படி இடைத்தூரம் சரியாக இல்லை என்றறிந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தயான் சந்தின் திறமையை பார்த்த ஹிட்லர் ஜெர்மன் குடியுரிமையுடன், ராணுவத்தில் கர்னல் (colonel) பதவியும் தருவதாக சொல்லி இருக்கிறார்! அந்த சலுகையை தயான் சந்த் மறுத்து விட்டார் எனக் கூறப்படுகிறது.
சர்வதேச ஹாக்கியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்களை இவர் அடித்துள்ளார்.
இவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் என அனைவராலும் எதிர்பார்க்கபட்டது. விளையாட்டு அமைச்சகமும் இவருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா கொடுக்கப்படுவதில்லை என்பதால் அதை அரசு மறுத்துவிட்டது.
அது எப்படியோ, இன்றளவும் உலக அளவிலான ஹாக்கி ரசிகர்களின் மனதில் பாரத் ரத்னாவாக தயான் சந்த், ஹாக்கி விளையாடி கொண்டுதான் இருக்கிறார்.