கென்யாவைச் சேர்ந்த நம்பர் 1 மாரத்தான் வீரரான கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளரும் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக கென்யா நாடாளுமன்ற உறுப்பினர் கிடியோன் கிமையோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதனால் கென்யா மக்களும் தடகள வட்டாரத்தினரும் ஆழ்ந்த சோகத்தில் முழ்கியுள்ளனர்.
24 வயதான கிப்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் சிகாகோ மாரத்தான் போட்டியில் இரண்டு மணி நேரம் 35 வினாடிகளில் போட்டியின் தூரத்தைக் கடந்து உலக சாதனைப் படைத்தார். அதேபோல் சென்ற ஆண்டே லண்டன் மாரத்தான் போட்டியிலும் இரண்டு மணிநேரம் ஒரு நிமிடம் மற்றும் 25 வினாடிகளில் ஓடி சாதனைப் படைத்தார்.
அந்தவகையில் கிமையோ, கெல்வினின் இறப்புச் செய்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, “உலக மாரத்தான் சாதனையாளர் கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் ஆகியோர் கென்யாவின் எல்டோரெட்- கப்டகாட் சாலையில் விபத்தில் சிக்கிக் காலமாகிவிட்டனர் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
கெல்வின் கிப்டம் தடகளத்தில் ஒரு ஜாம்பவான் ஆவார். மற்றும் தனது தொழில் வாழ்க்கையிலும் சிறந்தவர். அவரின் இந்த திடீர் இழப்பு நம்பமுடியாத ஒன்று மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றும் கூட. இந்த இழப்பால் கென்யா மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். அவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று பதிவிட்டிருந்தார்.
லண்டன் மாரத்தான் அமைப்பு, “ மாரத்தான் உலக சாதனையாளர் கெல்வின் கிப்டம் மற்றும் அவரின் பயிற்சியாளரின் மரணம் குறித்த பயங்கரமான செய்தியை கேட்டு மிகுந்த அதிர்ச்சியில் உள்ளோம். எங்களின் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டிருந்தது.
மேலும் உலக தடகள தலைவர் செப் கோ,” கெல்வின் கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளரின் இழப்பை அறிந்து அதிர்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றோம். உலக தடகளத்தில் உள்ள அனைவரின் சார்பாக அவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். சமீபத்தில் தான் கெல்வின் சிகாகோவில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தனது அசாதாரணமான உலக சாதனையைப் படைத்தார். நினைத்து பார்க்க முடியாத ஒரு சாதனையைப் படைத்த கெல்வின் நினைத்து பார்க்காத அளவிற்கு நம்மை விட்டு சென்றுள்ளார்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கெல்வின் ரோட்டர்டாம் மாரத்தானில் பங்கேற்கவிருந்தார். உலக சாதனைப் படத்தப் பிறகு கலந்துக்கொள்ளும் அவரின் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.