இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்குத் தடை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஆசிய கோப்பை 2025 தொடரின் ஒரு பகுதியாக, துபாயில் செப்டம்பர் 14 அன்று நடக்கவுள்ள இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
மனுதாரர் தரப்பில், "போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது, எனவே நாளை (வெள்ளிக்கிழமை) உடனடியாக விசாரிக்க வேண்டும்" என்று கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "போட்டி நடந்தே ஆக வேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறினர்.
"இதில் என்ன அவசரம்? இது ஒரு போட்டி மட்டும்தான், நடக்கட்டுமே" என்று நீதிபதிகள் கேட்டனர். மேலும், "போட்டி ஞாயிற்றுக்கிழமை நடக்கிறதா? அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? அது நடக்கட்டும்" என்றும் தெரிவித்தனர்.
இந்த பொதுநல மனுவை, உட்பட நான்கு சட்ட மாணவர்கள் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பஹல்காம் மற்றும் ஆப்ரேஷன் சிந்துர் போன்ற தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி நடத்துவது, தேசத்தின் பெருமைக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் முரணானது என்று கூறப்பட்டது.
மேலும், "நமது வீரர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து போராடும்போது, தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் ஒரு நாட்டுடன் கிரிக்கெட் கொண்டாட்டம் நடத்துவது தவறான செய்தியாகும்." என்று மனுதாரர்கள் தெரிவித்தனர். இது, தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் என்றும், பொழுதுபோக்கை விட தேசத்தின் கண்ணியமே முக்கியம் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.
ஆனால், நீதிபதிகளின் அதிரடியான பதில், இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு இருந்த சட்டத் தடை நீங்கி, போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.
ஆசிய கோப்பையில் புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக இந்தியா ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தனது அடுத்த போட்டியை செப்டம்பர் 19 அன்று ஓமனுக்கு எதிராக அபுதாபியில் விளையாட உள்ளது. குழுநிலைப் போட்டிகளுக்குப் பிறகு, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதிபெறும்.
குழுநிலைப் போட்டிகளுக்குப் பிறகு, சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெறும். இந்தியா குழு A-வில் முதலிடம் பெற்றால், அதன் அனைத்து சூப்பர் 4 போட்டிகளும் துபாயில் நடைபெறும். ஆனால், இரண்டாம் இடம் பெற்றால், ஒரு போட்டி அபுதாபியிலும், மற்ற இரண்டு போட்டிகள் துபாயிலும் நடைபெறும்.