பயந்தாங்கோலிகளுக்கு அணியில் இடமில்லை – இந்திய அணியின் பயிற்சியாளர் !

Gautam Gambhir
Gautam Gambhir
Published on

சமீபத்தில், இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அவர் வீரர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியிருக்கிறார்.

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரே இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிடிற்கு கடைசி தொடராகும். அதன்பிறகு பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீரே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது.

இதிலிருந்து கவுதம் கம்பீரே பயிற்சியாளராக தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியா - இலங்கை அணிகள் மோதும் டி20 தொடர் முதல் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை வரை கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை சுற்றுப்பயணத்திற்கான அணித் தேர்வில் இருந்தே தனது பணியை துவக்கி விடுவார்.

இவர் பயிற்சியாளராக வருவதற்கு முன்னரே பல விதிமுறைகளை விதித்திருந்தார். இதனையடுத்து தற்போது வீரர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார்.

"ஒரு தொழில்முறை விளையாட்டு வீரருக்கு காயம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. ஒரு கிரிக்கெட் வீரர் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினால், அவருக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சில வீரர்களுக்கு மட்டும் ஓய்வு கொடுத்து, அவர்களது பணிச்சுமையை மட்டும் நிர்வகிப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், ஒரு வீரர் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்றால், அவர் தனது காயங்கள் அனைத்திலிருந்தும் மீண்டு இருக்க வேண்டும்.

நீங்கள் உங்கள் கிரிக்கெட்டை முழு உண்மையுடன் அணுக வேண்டும். நான் எனது பேட்டை எடுத்தேன் என்றால், போட்டியின் முடிவின் மீது கவனம் செலுத்த மாட்டேன். உண்மையாக ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். நீங்கள் உங்கள் வேலைக்கு உண்மையாக இருந்தால், முடிவுகள் உங்கள் பின்னே வரும். அணியின் வெற்றிக்கு என்ன தேவையோ அதைதான் நாம் செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
Paris: ஒலிம்பிக் தொடரால் சாலையோர மக்கள் விரட்டியடிப்பு!
Gautam Gambhir

நான் ஆடுகளத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பேன். மற்றவர்களுடன் மோதலில் ஈடுபட்டு இருக்கிறேன். ஆனால், அது எல்லாமே அணியின் நலனை கருதி நான் செய்தது ஆகும். அந்த மனநிலை இப்பொழுது உள்ள வீரர்களுக்கும் தேவை. உங்கள் அணியை வெற்றிபெற வைப்பதில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட சாதனைகளில் அல்ல." என்று பேசியிருக்கிறார்.

இதன்மூலம் இனி எந்த ஒரு வீரரும் காயம் ஏற்பட்டுவிடும் என்ற பயத்துடன் தயங்கி, தயங்கி விளையாடுவதோ, தங்களின் தனிப்பட்ட ரெக்கார்டுகளுக்காக பந்துகளை வீணடிப்பதோ செய்தால் அணியில் இடமில்லை என்பதை மறைமுகமாக கூறியிருக்கிறார், கவுதம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com