கிரிக்கெட் வீரர் தோனி தான் ஒழுங்காக இருப்பதற்கு இவர்தான் காரணம் என்று சொல்லி தனது ரகசியத்தை உடைத்திருக்கிறார்.
சென்னை அணியின் அடையாளம் என்றால், அது தோனிதான். தோனிக்கு வயதாகி வருவதால், எந்த நேரமும் ஓய்வை அறிவிக்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால், கடந்த சில ஆண்டுகளாகவே ஓய்வு குறித்தான ரூமர்ஸ் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இப்படியான சமயத்தில்தான் சென்ற ஆண்டு ஐபிஎல் தொடரில் தன்னுடைய கேப்டன் பதவியை ருதுராஜுக்கு கொடுத்துவிட்டார். அதுமுதல் அவருக்கு பல விஷயங்களை கற்றுத்தந்து வருகிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் அன்கேப்புடு ப்ளேயராக வாங்கப்பட்டார். தனது சம்பளத்தை பெரிய விஷயமாக கருதாமல், முழுதும் ரசிகர்களுக்காகவே விளையாடி வருகிறார்.
சென்னை அணி விளையாடும்போதெல்லாம், தோனி கடைசி 4 ஓவர்களிலேயே களம் இறங்க விரும்புகிறார். அதற்கு முன் இருக்கும் ஓவர்களில் அணியின் வேறு வீரர்களை விளையாட வைக்கிறார். இதனால், விமர்சனங்கள் எழுந்தன.
அதேபோல் தோனி தான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வெடுப்பேனா என்பது குறித்து முடிவெடுக்க இன்னும் 10 மாதங்கள் இருக்கின்றன என்று விமர்சனங்களுக்கு பதிலளித்தார்.
ஆனால், இன்னும் விமர்சனங்கள் மட்டும் குறையவே இல்லை. இப்படியான நிலையில், ஒரு உரையாடலின்போது தன்னுடைய ரகசியம் குறித்து பேசியிருக்கிறார் தோனி.
“எங்கள் அப்பா மிகவும் கண்டிப்பானவர். அவர் ஒழுங்காக இருந்தார்; எப்போதும் சரியாக இருக்க வேண்டும் என்று சொல்வார். அதனால்தான் நான் ஒழுங்காக இருக்கிறேன். அவர் எங்களை அடித்தது இல்லை. ஆனால் அந்த பயம் இருந்தது.
என் நண்பர்கள் காலனியில் சுவர்களில் ஏறுவார்கள், ஆனால் நான் ஒருபோதும் அவர் பேச்சை மீறவில்லை. என் தந்தை பார்த்தால், நாங்கள் போய்விடுவோம். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாது, ஆனால் நாங்கள் அவருக்கு பயந்தோம்.
நாங்கள் எங்கள் குழந்தை பருவத்தில் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்டோம். என் ஆசிரியர்களும் சகோதரர்களும் எனக்கு அதிகம் கற்றுக்கொடுத்தார்கள். எனக்கும் எனது சகோதரருக்கும் 10 வயது வித்தியாசம்.” என்று பேசியுள்ளார்.