ரெய்னா விளையாட நினைக்கும் ஐபிஎல் அணி இதுதான்... சென்னை அல்ல!

Raina and Rohith
Suresh Raina
Published on

சென்னை அணி பெற்ற பல சரித்திர வெற்றிகளில் ரெய்னாவின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. இதனாலேயே இவரை ‘மிஸ்டர் ஐபிஎல்’ என ரசிகர்கள் அழைத்தனர். கேப்டன்சியில் தோனி அற்புதமாக செயல்பட, ரன் குவிப்பில் அவருக்கு உறுதுணையாக இருந்தார் ரெய்னா.

சென்னை அணி சூதாட்டப் புகாரில் சிக்கி 2 வருடங்கள் தடையைப் பெற்ற சமயத்தில், கொச்சி அணியை கேப்டனாக வழிநடத்தினார் ரெய்னா. அதன்பிறகு மீண்டும் சென்னை அணியில் இணைந்தவர் கோப்பை வெல்ல காரணமாக இருந்தார். 2021 ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் எடுக்கவில்லை. அணியின் நலன் கருதி சென்னை அணி நிர்வாகம் இந்த கடினமான முடிவை எடுத்தது. இதனால் வேறு எந்த அணியிலும் விளையாட விருப்பம் இல்லாமல் ஓய்வு முடிவை அறிவித்தார் ரெய்னா.

சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்காக 226 ஒருநாள் போட்டிகள், 78 டி20 போட்டிகள் மற்றும் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதோடு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 205 ஆட்டங்களில் விளையாடி 5,528 ரன்களையும் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் 5,000 ரன்களைக் குவித்த முதல் வீரர் ரெய்னா தான். ஐபிஎல் தொடரில் சென்னை அணியைக் கட்டமைத்ததில் தல தோனிக்கு தளபதியாக துணை நின்றார் ரெய்னா.

கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக வலம் வரும் சுரேஷ் ரெய்னா, சென்னை அணி தோல்வியடைவதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார். வர்ணனையின் போது அடிக்கடி கேள்விகள் கேட்கப்படுவது வழக்கம். அவ்வகையில் சுரேஷ் ரெய்னாவிடம் ஒரு புதுவிதமான கேள்வி கேட்கப்பட்டது. அதாவது "உங்களுக்கு மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தால், எந்த அணியில் விளையாட ஆசைப்படுவீர்கள்?" என கேட்கப்பட்டது. இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த ரெய்னா, 'மும்பை இந்தியன்ஸ்' அணியைத் தேர்ந்தெடுத்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அடுத்து எனக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை மிகவும் பிடிக்கும். மீண்டும் எனக்கொரு வாய்ப்பு கிடைத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடவே ஆசைப்படுவேன். மும்பை அணியில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து விளையாடுவதை விரும்புவேன். வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ரோஹித்துடன் சேர்ந்து பேட்டிங் செய்தால் சிறப்பாக இருக்கும்” என ரெய்னா தெரிவித்தார்.

சென்னை அணியைப் போலவே மும்பை அணியும் வெற்றிகரமான ஐபிஎல் அணி என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவ்விரு அணிகளும் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி உள்ளன. மும்பை அணியை சிறப்பாக வழிநடத்தியதன் மூலமாகத் தான் இந்திய அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டார் ரோஹித் சர்மா.

தற்போது ரோஹித் மும்பை அணியில் இம்பேக்ட் பிளேயராக பேட்டிங் மட்டுமே செய்து வருகிறார். ரோஹித் சர்மாவும் இன்னும் ஒருசில ஆண்டுகளில் ஓய்வு பெற்று விடுவார் என்பதால், லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரில் அவருடன் இணைந்து விளையாட, ரெய்னாவிற்கு அதிக வாய்ப்புண்டு.

இதையும் படியுங்கள்:
தடுமாறும் சென்னை அணி! விரக்தியில் ரெய்னா!
Raina and Rohith

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com