
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸின் இன்றைய நிலைமை படுமோசமாகவே உள்ளது. உண்மையை சொல்வதென்றால் சென்னை அணி வீரர்கள் வெற்றிக்காக முயற்சி கூட செய்ததாக தெரியவில்லை. இது களத்தில் நன்றாகவே தெரிகிறது. மற்ற அணிகளில் இளம் வீரர்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர். ஆனால் சென்னை அணியில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
18 ஐபிஎல் சீசன்களில், இம்முறை தான் சென்னை அணி அதிகமாக தடுமாறுகிறது. அனுபவம் மிக்க வீரர்களை அணியில் வைத்துக் கொண்டு ஐபிஎல் தொடரில் சாதித்த பெருமை சென்னை அணிக்கு உண்டு. ஆனால் இன்றும் அதே யுக்தி எடுபடுமா என்பதை சென்னை அணி நிர்வாகம் சிந்தித்திருக்க வேண்டும். ஐபிஎல் ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்காதது கூட சென்னை அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதோடு கேப்டன் ருதுராஜ் விலகல் சென்னைக்கு பின்னடைவாக அமைந்து விட்டது.
நடப்புத் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினம் என்றாலும், குறைந்தபட்சம் எதிரணிக்கு சவால் கொடுக்கும் வகையில் சென்னை அணி செயல்பட வேண்டும். சென்னை அணியில் கடந்த ஒருசில ஆட்டங்களில் தான் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இதனை முன்பே செய்திருந்தால், புள்ளிப்பட்டியலில் முன்னேறி இருக்கலாம்.
ஒரு காலத்தில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்தார் சுரேஷ் ரெய்னா. அவரது ஓய்வுக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்ப சரியான வீரரை இன்னுமும் சென்னை அணி கண்டுபிடிக்காதது வருத்தமே. இந்நிலையில், எந்நாளும் இதுபோன்றதொரு தடுமாற்றத்தை சென்னை அணியில் நான் கண்டதே இல்லை என சுரேஷ் ரெய்னா விரக்தியடைந்துள்ளார். முதல் சீசனில் இருந்து தோனியுடன் இணைந்து சென்னை அணியை கட்டமைத்தார் ரெய்னா. தற்போது அவர் கண் முன்னே சென்னை அணி அடுத்தடுத்த தோல்விகளைத் தழுவி தடுமாறுவதை காண முடியாமல் தவிக்கிறார்.
இதுகுறித்து ரெய்னா கூறுகையில், “ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி நிர்வாகமும், பயிற்சியாளரும் சிறப்பாக செயல்படவில்லை. அணி வீரர்களின் செயல்பாட்டில் இருந்தே இதனைப் புரிந்து கொள்ள முடிகிறது. கே.எல்.ராகுல், ஸ்ரேயஷ் ஐயர் மற்றும் பிரியன்ஸ் ஆர்யா போன்ற திறமையான வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்கத் தவறியது. அதன் விளைவைத் தான் தற்போது சென்னை அணி அனுபவிக்கிறது. மற்ற அணி வீரர்கள் அதிரடியாக ரன்களைக் குவிக்கும் போது, சென்னை அணி மட்டும் மந்தமாக செயல்படுகிறது. இப்படியொரு தடுமாற்றத்தை நான் இதுவரை கண்டதே இல்லை” என சுரேஷ் ரெய்னா ஆதங்கமாக கூறியுள்ளார்.
மாறி வரும் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு ஏற்ப சென்னை அணி மாற்றியமைக்கப்பட வேண்டியது கட்டாயம். இல்லையெனில் தோல்வியே மிஞ்சும். சென்னை அணியில் பவுண்டரிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்குத் தான் அதிரடியான இளம் வீரர்கள் தேவை என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள். இருப்பினும், பிளே ஆஃப் சுற்றுக்கு கூடுமானவரை முயற்சி செய்வோம்; இல்லையெனில் அடுத்த ஆண்டு வலுவாக திரும்பி வருவோம் என கேப்டன் தோனி கூறியிருக்கிறார்.
அடுத்த ஆண்டும் இதே யுக்தியோடு விளையாடினால் சென்னை அணியால் வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியாது. திறமையான இளம் வீரர்களைக் கொண்டு நவீன கால கிரிக்கெட்டிற்கு ஏற்ப சென்னை அணி கட்டமைக்கப்பட வேண்டும். அப்போது தான் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப்பாதையில் பயணிக்க முடியும்.