
கிரிக்கெட்டில் மூத்த வீரர்கள் ஓய்வு பெறுவதும், இளம் வீரர்கள் அவதரிப்பதும் காலத்திற்கேற்ப தொடர்ந்து நடக்கின்றன. இதில் பல வீரர்கள் கிரிக்கெட் உலகிற்குள் காலடி வைத்ததே, முன்னாள் வீரர்கள் கிரிக்கெட் ஆடிய விதத்தைக் கண்டு தான். பல சாதனைகள் படைத்த சச்சின், தோனி மற்றும் கோலி போன்ற வீரர்கள் கூட கிரிக்கெட்டில் பயணிக்க, ஆரம்ப காலத்தில் ஏதோ ஒன்று ஊன்றுகோலாக இருந்திருக்கும். அதேபோல் இந்தியாவின் இளம் வீரர் திலக் வர்மாவும், முன்னாள் வீரர் ஒருவரின் ஆட்டத்தைப் பார்த்து தான் கிரிக்கெட் கனவையே கண்டாராம்.
தெலங்கானாவைச் சேர்ந்த திலக் வர்மா 2018 ஆம் ஆண்டில் தான் முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். அடுத்த நான்கே வருடங்களில் ஐபிஎல் தொடரில் தனக்கான இடத்தைப் பிடித்து விட்டார். ஐதராபாத் அணிக்காக ரஞ்சிக் கோப்பை, விஜய் ஹசாரே டிராபி, முஷ்டாக் அலி கோப்பை உள்ளிட்ட பல தொடர்களில் பங்கேற்று விளையாடியுள்ளார்.
தொடர்ந்து திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 2019 ஆம் ஆண்டில் U-19 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஆனால் உலகக் கோப்பையில் ரன் குவிக்கத் தடுமாறினார். இருப்பினும் அதிலிருந்து மீண்டு, தொடர் பயிற்சிகளின் மூலம் தன்னை மேலும் மெருகேற்றிக் கொண்டார். இவரது ஆட்டத் திறனைக் கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், 2022 ஆம் ஆண்டு இவரை ஐபிஎல் ஏலத்தில் எடுத்தது.
கடந்த 4 சீசன்களாக மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடியதால், இந்திய டி20 அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார் திலக் வர்மா. தனது அதிரடியான ஆட்டத்தால், தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராகவும் திகழ்கிறார். இன்று திலக் வர்மா இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறார் என்றால், அதற்கு முக்கிய காரணமே ஐபிஎல் தொடர் தான்.
திலக் வர்மாவின் கிரிக்கெட் கனவிற்கு விதை போட்டது முதல் ஐபிஎல் சீசனில் பிரன்டன் மெக்கல்லம் அடித்த அதிரடி சதம் தான். 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்கிய போது, கொல்கத்தா அணி வீரர் பிரண்டன் மெக்கல்லம் முதல் போட்டியிலேயே 158 ரன்களை விளாசி சாதனை படைத்திருப்பார். ஐபிஎல் கிரிக்கெட்டைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு நிச்சயம் இந்த இன்னிங்ஸ் நினைவில் இருக்கும். அவர் விளையாடியதை தொலைக்காட்சியில் பார்த்த போது திலக் வர்மாவின் வயது வெறும் 6 தான்.
கிரிக்கெட்டின் மீது சரியான புரிதல் இல்லாத அந்த வயதிலேயே, மெக்கல்லம் அடித்த சதத்தைக் கண்டு வியந்ததோடு, தனது ஆர்வத்தை கிரிக்கெட்டின் பக்கம் திருப்பினார். பிறகு 2010 இல் இவர் கிரிக்கெட்டை மெல்ல மெல்ல புரிந்து கொள்ளத் தொடங்கினார். 2011 இல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதும், தானும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என கனவு கண்டார் திலக் வர்மா.
அன்று திலக் வர்மா கண்ட கனவு இன்று மெய்பித்ததுள்ளது. இந்திய டி20 அணியின் நட்சத்திர வீரராகவும், மும்பை அணியின் அதிரடி பேட்டராகவும் இவர் ஜொலிக்கிறார்.