கிரிக்கெட்டை அதிகளவிலான ரசிகர்கள் விரும்பிப் பார்ப்பதற்கு காரணமே அதிரடியான பேட்டிங் தான். பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி பந்துகளை பறக்க விடும் காட்சிகளும், நாலாபுறமும் சிதற விடும் காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமையும். அதிலும் டி20 கிரிக்கெட் வந்தபிறகு பந்துகள் அதிகமுறை சிக்ஸருக்கு பறப்பது வாடிக்கையாகி விட்டது. டெஸ்ட் போட்டிகளைக் கூட சில வீரர்கள் டி20 போட்டிகளைப் போல் விளையாட ஆரம்பித்து விட்டனர். அப்படியெனில் டி20 போட்டிகளில் பேட்ஸ்மேன்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.
அதிரடி மட்டும் தான் இன்றைய டி20 பேட்ஸ்மேன்களின் குறிக்கோளாக இருக்கிறது. அதற்கு சிறிய அணியான ஜிம்பாப்வேவும் விதிவிலக்கல்ல. ஆம், காம்பியா அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்களைக் குறித்து வரலாற்றுச் சாதனையை படைத்து விட்டது ஜிம்பாப்வே அணி!
ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் காம்பியா அணிக்கு எதிரான போட்டியில் 344 ரன்களைக் குவித்து வரலாற்றுச் சாதனையைப் படைத்தது ஜிம்பாப்வே. இப்போட்டியில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா அதிரடியாக விளையாடி வெறும் 43 பந்துகளில் 133 ரன்களை விளாசி சாதனைப் படைத்தார். மேலும் பென்னட், மருமணி மற்றும் மடாண்டே ஆகியோரும் அதிரடியாக அரைசதம் அடித்தனர். இப்போட்டியில் ஜிம்பாப்வே அணி மொத்தமாக 27 சிக்ஸர்களை பறக்க விட்டது. இதில் ராஸா மட்டும் 15 சிக்ஸர்களை அடித்தார். அதிகபட்ச இலக்கைத் துரத்திய காம்பியா அணி 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 290 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றியை ருசித்தது.
ஓர் அணி டி20 போட்டியில் அதிக ரன்களை அடித்ததும், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும் என ஜிம்பாப்வே அணியின் சாதனைப் பட்டியல் தொடர்கிறது. இதுதவிர்த்து ஜிம்பாப்வே அணிக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வடிவ கிரிக்கெட்டிலும் சதமடித்த ஒரே வீரர் என்ற சாதனையையும் சிக்கந்தர் ராஸா படைத்துள்ளார். ஒரு அணி டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கும் மேல் எடுப்பது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே கடந்த ஆண்டு மங்கோலியாவுக்கு எதிரான போட்டியில் நேபாள் அணி 314 ரன்களைக் குவித்தது. நடப்பாண்டின் அக்டோபர் மாத தொடக்கத்தில் சிலி அணிக்கு எதிராக அர்ஜென்டினா 301 ரன்களைக் குவித்தது.
இதற்கு அடுத்ததாக இந்திய அணி சமீபத்தில் வங்கதேச அணிக்கு எதிராக 297 ரன்களைக் குவித்து நான்காவது இடத்தில் இருக்கிறது. நவீன கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் அதிரடியும், பௌலர்களின் பரிதாபமும் தொடர்கிறது. இதற்கு தற்போது மேலும் ஒரு எடுத்துக்காட்டாய் இந்தப் போட்டி அமைந்துள்ளது. கிரிக்கெட் விதிமுறைகள் பலவும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. இந்த விதிமுறைகள் கிரிக்கெட்டை வளர்ப்பதற்காகவா அல்லது ரசிகர்களை குஷிப்படுத்தி வருமானத்தை அதிகரிப்பதற்காகவா என்ற கேள்வியும் எழுகிறது. எது எப்படியோ கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் மூலம் வாணவேடிக்கையைக் காண்பதும் நல்லா தான் இருக்கு!