
உலக அளவில் மிகவும் பிரபலமான கிரிக்கெட் தொடர்களில் இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் முக்கியமானது. தொடக்கத்தில் 8 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடர், தற்போது 10 அணிகளுடன் ஆண்டுதோறும் திருவிழா போல் நடத்தப்படுகிறது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளாக இருப்பவை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தான். இந்த இரண்டு அணிகளும் தலா 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்களைக் குவித்த டாப் 10 வீரர்கள் யார் என்பதை இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்எஸ் தோனியின் தலைமையில் விளையாட பல வீரர்கள் ஆசைப்பட்டனர். இருப்பினும் அந்த வாய்ப்பு கிட்டியது வெகு சிலருக்குத் தான். தோனியின் தலைமைப் பண்பை பாராட்டிய வீரர்கள் அநேகம். இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வரும் தோனிக்காகவே பல ரசிகர்கள் மைதானத்தில் கூடுகின்றனர். தொடர்ந்து 17 சீசன்களில் விளையாடி வரும் தோனி, விரைவில் ஓய்வு பெறத் கூடும் என்பதால், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் மீதான எதிர்ப்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்து விட்டது.
சென்னை அணிக்காக தோனி எவ்வளவு ரன்களைக் குவித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாது. இருப்பினும் அவர் அடிக்கும் ஒற்றை சிக்ஸரையாவது பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கிடப்பார்கள். தற்போது சென்னை அணிக்காக அதிக ரன்களைக் குவித்த வீரர்களின் பட்டியலைப் பார்ப்போம். கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடும் தோனி இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரின் தொடக்கம் முதலே சென்னை அணியின் ரன் மெஷினாக இருந்தவர் சுரேஷ் ரெய்னா. இவரை சின்ன தல என்றும் ரசிகர்கள் அழைப்பதுண்டு. சென்னை அணிக்காக அதிக ரன்களைக் குவித்தவர் பட்டியலில் 5,529 ரன்களுடன் முதலிடத்தில் இருப்பவரும் ரெய்னா தான். அடுத்ததாக 5,118 ரன்களைக் குவித்து தல தோனி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக விளையாடினால், ரெய்னாவின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புள்ளது.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பாஃப் டூபிளசிஸ் 2,932 ரன்களுடன் 3வது இடத்திலும், சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 2,380 ரன்களுடன் 4வது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் ஹஸ்ஸி 2,213 ரன்களுடன் 5வது இடத்திலும், தமிழக வீரர் முரளி விஜய் 2,205 ரன்களுடன் 6வது இடத்திலும், ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா 2,053 ரன்களுடன் 7வது இடத்திலும் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அம்பத்தி ராயுடு 1,932 ரன்களுடன் 8வது இடத்திலும். தமிழக வீரர் பத்ரிநாத் 1,667 ரன்களுடன் 9வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ 1,280 ரன்களுடன் 10வது இடத்திலும் உள்ளனர்.