

இந்தியன் பிரீமியர் லீக் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, எண்ணற்ற வீரர்கள் வந்து சென்றாலும், சில வீரர்கள் மட்டும் தங்கள் அசைக்க முடியாத திறமையாலும், அபாரமான உடல் தகுதியாலும் தொடர்ந்து விளையாடி வருவதுடன் ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அந்த பட்டியலில், தோனி முதலிடத்தில் கம்பீரமாக நிற்க, அவருக்கு பின்னால் சில முக்கிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
முதலிடத்தில் 'தல' தோனி :
ஐபிஎல் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வரும் முதல் பெயர் எம்.எஸ்.தோனி. எம்எஸ் தோனி இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை அணிக்காக விளையாடும் ஒரு இந்திய கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி மிக முக்கியமான முகமாக இருந்து வருகிறார். ஐபிஎல் தொடர் துவங்கிய ஆண்டு முதல் இப்போது வரை (2008-2024)சுமார் 17 ஆண்டுகளாக விளையாடி வரும் தோனி இதுவரை 278 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆன்மாவாக விளங்கும் இவர், கேப்டனாக இருந்த 226 போட்டிகளில், 133 வெற்றிகளையும், 91 தோல்விகளையும், 58.84 வெற்றி சதவீதத்துடன் பதிவு செய்துள்ளார்.
ஜாம்பவான் தோனி வீரராக பேட்டிங்கில் 264 போட்டிகளில், 137.54 ஸ்ட்ரைக் ரேட்டிலும், 39.13 சராசரியிலும், 5243 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி எம்எஸ் தோனி தனது ஐபிஎல் வாழ்க்கையில் 363 பவுண்டரிகள், 252 சிக்ஸர்கள், 24 அரை சதங்கள், மற்றும் அவரது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் 84* ரன்களாகும். 2008-ம் ஆண்டு முதல், தோனி சிஎஸ்கே அணியை ஐந்து ஐபிஎல் பட்டங்களுக்கு வழிநடத்தியுள்ளார், மேலும் பன்னிரண்டு முறை பிளேஆஃப்கள் மற்றும் பத்து முறை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கேப்டன் மற்றும் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை செய்திருக்கிறார். மேலும் ஐபிஎல் கோப்பையை இரண்டு ஆண்டுகள்(2010, 2011) தொடர்ந்து வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையும் தோனியை மட்டுமே சேரும்.
அவருக்கு இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 42 வயதை கடந்தும், களத்தில் தனது திறமையான மற்றும் அமைதியான தோற்றத்திற்கு பெயர் பெற்றவர் தோனி. போட்டிகளின் பரபரப்பான சூழலிலும் எந்தவித பதற்றத்துக்கும் ஆளாகாமல் அமைதியாக இருந்து ஆட்டத்தின் போக்கை மாற்றுவதே அவரது தனித்திறமை ஆகும்.
அணி தோல்வியின் விளிம்புக்கே சென்றாலும் முகத்தில் எந்தவித சலனமும் காட்டாமல் அமைதியின் உருவமாக போட்டியை வழிநடத்தும் அவரை, ‘கேப்டன் கூல்’ என ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகிறார்கள்.
ரோகித் சர்மா :
ரோகித் சர்மா இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளில் மிகவும் வெற்றிகரமான வீரர்களில் ஒருவர். இவர் 2008-ம் ஆண்டு ஐபிஎல் லீக்கின் தொடக்க சீசனில் இருந்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கி ரோகித் சர்மா, பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். தனது அதிரடி பேட்டிங் மற்றும் சாதூர்யமான கேப்டன்ஷிப் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐந்து முறை IPL கோப்பையை வென்ற கேப்டனாக அறியப்படும் ரோகித் சர்மா, இதுவரை 272 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
விராட் கோலி :
ஐபிஎல்லின் ஒரு சிறந்த 'ரன் மெஷின்' என்று அனைவராலும் அழைக்கப்படும் விராட் கோலி, 267 போட்டிகளில் விளையாடி இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஐபிஎல் ஆரம்பித்த காலத்தில் இருந்து, 2025-ம் ஆண்டுவரை கிட்டதட்ட 18 ஆண்டுகளாக பெங்களூர் அணிக்காக மட்டுமே விளையாடி வரும் இவர், ஒரு அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமைக்குரியவர்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற மகத்தான சாதனையையும் கோலி தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும், 18-வது சீசனில்தான் ஆர்சிபியால் கோப்பையை வெல்ல முடிந்தது.
தினேஷ் கார்த்திக் :
இந்திய அணியின் அனுபவமிக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக், 257 போட்டிகளில் விளையாடி நான்காவது இடத்தில் இருக்கிறார். 2008-ல் ஐபிஎல் வாழ்க்கையை தொடங்கிய இவர், கொல்கத்தா, மும்பை, பெங்களூரு என பல அணிகளுக்காக தனது பங்களிப்பை அளித்துள்ள கார்த்திக், ஒரு சிறந்த ஃபினிஷராக அறியப்படுகிறார். 2024 சீசனில் RCB-க்காக விளையாடிய பிறகு, அவர் IPL மற்றும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
ரவீந்திர ஜடேஜா :
தோனிக்கு அடுத்து சிஎஸ்கே அணியின் மற்றொரு தூணான ரவீந்திர ஜடேஜா, 254 போட்டிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். சென்னை அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில் தோனிக்கு அடுத்தபடியாக ஜடேஜா (200) இரண்டாவது இடத்தில் உள்ளார். பேட்டிங்கில் 5 அரைசதங்கள் உட்பட 3260 ரன்கள் சேர்த்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசியவர்களின் பட்டியலில் ஜடேஜாவும் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். இதுவரை 109 கேட்ச்களை பிடித்து, ஒட்டுமொத்தமாக ஐபிஎல் போட்டியில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு மூலம் அணியின் நட்சத்திர வீரராக திகழ்வதோடு, ஃபீல்டிங்கின் அணியில் மற்ற வீரர்களுக்கான முன்மாதிரியாகவும் ஜடேஜா செயல்பட்டு வருகிறார்.