‘தோனி மைதானத்தில் இதை செய்யவே மாட்டார்’... ரகசியத்தை போட்டுடைத்த சாய் கிஷோர்!

தோனி இந்த விஷயத்தை மைதானத்தில் செய்யவே மாட்டார் என்று தமிழக வீரர் சாய் கிஷோர் கூறியுள்ள விஷயம் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Dhoni Sai Kishore
Dhoni Sai Kishore
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரும், சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உண்டு. தோனி, பல வருடங்களுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், இப்போது ஐ.பி.எல் போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும், அவரது புகழ் மற்றும் செல்வாக்கு எப்போதும் உச்சத்திலேயே இருந்து வருகிறது. தோனி என்ற பெயரை கேட்டாலே கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள். சச்சினுக்கு அடுத்ததாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஃபேவரைட் ஆக திகழ்ந்தவர் என்றால் அது தோனி தான்.

ரசிகர்களால் ‘தல’, ‘கேப்டன் கூல்’ என்றெல்லாம் செல்லமாக அழைக்கப்படும் தோனி இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி டிராபியை பெற்றுத் தந்துள்ளார் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸை வழிநடத்தி 5 ஐபிஎல் கோப்பையை பெற்று தந்தார்.

தோனியின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அவரது தலைமைத்துவப் பண்பு. அனுபவம் வாய்ந்த மற்றும் இளம் வீரர்களை அவர் எப்போதும் சரியான சமநிலையில் சமாளித்தார், அவர் எந்த அணியை வழிநடத்தினாலும் வெற்றி பெற்றார்.

இதையும் படியுங்கள்:
இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவுரை வழங்கிய தோனி - சொன்னது என்ன?
Dhoni Sai Kishore

பதற்றமான சூழலில் கூட செம கூலாக விளையாடுவது, ஜெயிக்க முடியாத போட்டியில் அணியை உற்சாகப்படுத்தி ஜெயிக்க வைப்பது என அவரின் முடிவுகளுக்கும் கூட இங்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்றே சொல்ல வேண்டும்.

அதே போல், அவரது தலைமையின் கீழ் கிரிக்கெட் வீரர்கள் பலர் விளையாட ஆசைப்படுவதுண்டு. அந்த வகையில், தமிழக வீரர் சாய் கிஷோர் ஆரம்ப காலங்களில் சிஎஸ்கே அணியில் தோனி தலைமையின் கீழ் இரண்டு முழு சீசன்களுக்கும் அணியின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், அவரால் ஒரு போட்டியில் கூட விளையாட முடியவில்லை.

சி.எஸ்.கே. அணியுடனான இரண்டு சீசன்களிலும் சாய் கிஷோர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்றாலும், தோனியிடம் கற்றுக்கொண்டது அவருக்கு அடித்தளமாக அமைந்ததுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தி அந்த அணியில் நிலைத்து நிற்கவும் உதவியது. அங்கு சாய் கிஷோர் இந்தியாவின் மிகவும் நம்பகமான டி20 சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியில் சேர்ந்ததிலிருந்து, சாய் கிஷோர் 25 போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தாண்டு சாய் கிஷோர் தலைமையில் விளையாடிய திருப்பூர் அணி TNPL கோப்பையை முதல் முறையாக வென்றது. இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், சமீபத்தில் CSK அணியில் பயிற்சி பெற்றபோது MS தோனியிடமிருந்து கற்றுக்கொண்ட மதிப்புமிக்க பாடங்கள் பற்றிய நுண்ணறிவு விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். இது தற்போது இணையத்தில் படுவேகமாக பரவியதுடன், அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

அதுகுறித்து யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் கூறியதாவது, ‘தோனியிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டதாகவும், அவர் சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களை தவிர்ப்பதற்காக மைதானத்திற்கு வரும்போது அவருடைய போனை ஹோட்டலிலேயே வைத்துவிடுவார் என்றும் போனை கையில் வைத்துக்கொள்ள மாட்டார் என்றும் கூறியுள்ளார். அந்த அளவுக்கு அவர் தனிமையில் இருப்பார். சமூக ஊடகங்களில் ஈடுபடுவது தேவையா என்று நான் என்னை நானே கேட்டுக்கொண்டதால் இது எனக்கு உத்வேகம் அளித்தது. தோனியின் இந்த செயல் தனக்கு மிகவும் ஊக்கமாக இருந்ததாகவும், தோனியை பார்த்து கற்றுக்கொண்டதை தான் நான் இன்று வரை பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:
‘கேப்டன் கூல்’ புனைபெயருக்கு டிரேட் மார்க் கேட்கும் ‘தோனி’! ஆட்சேபம் இருக்குமா என்ன?
Dhoni Sai Kishore

முக்கியமாக, ஒரு வீரரை எப்படி கையாள்வது, ஒரு போட்டியில் ஒரு வீரரை எப்படி வைப்பது, குறிப்பிட்ட ஓவருக்கு யாரைப் பயன்படுத்துவது என்பதுதான் முக்கியம். அதை செயல்படுத்துவதில் தோனியை விட சிறந்தவர் யாரும் இல்லை; அது அனைவருக்கும் தெரியும்’ என்றும் அவர் மேலும் கூறினார்.

தோனியின் இத்தகைய செயல்கள் தான் அவரை கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாட காரணமாக உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com