பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று சாதனை: U19 ஆசியக் கோப்பையை தட்டித் தூக்கிய இந்தியா!

கடைசி ஓவர் த்ரில்லர் மோதலில் பாகிஸ்தானை வீழ்த்தி 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி.
Indian U19 Team
indian U 19 won Asia cupcricinfo
ராஜமருதவேல்

வி.ராஜமருதவேல், பொறியியல் பட்டதாரி; வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டுத் துறையில் பணிபுரிகிறார். கல்கி ஆன்லைனில் ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, சுற்றுச்சூழல், கலை-கலாச்சாரம், சினிமா ஆகிய பிரிவுகளில் எழுதி வருகிறார்.

Updated on: 

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, ஓமனில் உள்ள அல் எமிரேட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஆசியக் கோப்பை யாருக்கென்று தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும் இந்தியாவும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் உஸ்மான் கான் மிகவும் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஹயாம் கான் 21 ரன்கள் எடுத்து வெளியேறினாலும் அடுத்து களமிறங்கிய அப்துல் காதிர் , உஸ்மானுடன் இணைந்து வலிமையான கூட்டணி அமைத்தார்.

இந்த இரு அட்டக்காரர்களும் இணைந்து பாக் அணிக்கு மிகவும் வலிமையான தொடக்கத்தினை ஏற்படுத்திக் கொடுத்தனர். அப்துல் மிகவும் அதிரடியாக 54 பந்துகளில் 8 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை விளாசி 80 ரன்கள் அடித்தார். அணியின் ஸ்கோர் 197 ஐ தொட்ட போது, அவுட்டாகி வெளியேறினார். மறுபுறம் உஸ்மான் கான் 111 பந்துகளில் நிதானமாக 107 ரன்கள் குவித்தார் , இதில் 3 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளும் அடங்கும்.

அடுத்து களமிறங்கிய பர்ஹான் யூசுப் அணியின் ரன் வேகத்தினை குறைக்காமல் விளையாடத் தொடங்கினார். 3 சிக்சர்கள் 4 பவுண்டரிகளை விளாசி 63 ரன்களை குவித்தார். அதன் பின்னர் களமிறங்கியவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 50 ஓவர்கள் முடிவில் பாக் அணியின் ஸ்கோர் 9 விக்கெட் இழப்பிற்கு 337 ஆக உயர்ந்தது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசிய காவ்யா பரேஷ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் சிகுருபதி வெங்கட 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு லக்ஷ்யா ராய்சாந்தானி மற்றும் ஆர்யவீர் ஷேவாக் ஆகியோர் மிகச் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். மிகச் சிறப்பாக தொடக்கத்தை கொடுத்த இந்த கூட்டணி இணைந்து 97 ரன்களை குவித்தது. ஆர்யவீர் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய வினித் (24) , அர்ஜுன் ராஜ்புத் (16) , யஷ்வர்தன் சௌஹான் (9) ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் நம்பிக்கை முற்றிலும் தளர்ந்து போனது. தனியாக போராடிக் கொண்டிருந்த லக்ஷ்யா 80 ரன்களில் வெளியேற ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார்.

India U 19
Mohit ulvacricinfo

மணல் சௌஹான் ஆட்டத்தின் போக்கினை மாற்ற தொடங்கினார் , 32 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்து 47 ரன்கள் குவித்தார். மறுபுறம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க இயலாமல் இறுதி கட்ட பேட்ஸ்மென்கள் தொடர்ச்சியாக அவுட்டாகி வெளியேறினார். இறுதி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மோஹித் உல்வா மற்றும் சிகுருபதி வெங்கட இணைந்து ஆட்டத்தின் பரபரப்பைக் கூட்டினார்கள்.

மோஹித் 26 பந்துகளில் 3 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளை விளாசி 49 ரன்கள் எடுத்து, இறுதிப் பந்தில் பவுண்டரி விளாசி அணி திரில் வெற்றி பெற காரணமாக இருந்தார். இவருக்கு பக்க பலமாக இறுதி விக்கெட்டான சிகுருபதி(11) இருந்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய யு19 அணி ஆசியக் கோப்பையை பாகிஸ்தானை வீழ்த்தி வென்றது. இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக மோஹித்தும் , தொடர் நாயகனாக ஆர்யவீர் ஷேவாக்கும் விருதுகளைப் பெற்றனர்.