

இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாவேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டி இன்று மாலை 4.30 மணியளவில் ஹராரேவில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. டாசை வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணி மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் பந்திலேயே ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னட் கோல்டன் டக் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் விழ , அந்த அணியின் ரன் வேகம் மிகவும் குறைந்து போனது. அணியின் வெஸ்லி மாதவரே 39 ரன்கள் எடுத்ததே அணியின் அதிகபட்ச தனிநபர் ரன்களாக இருந்தது.
20 ஓவர்கள் முடிவில் அந்த அணி மிகவும் சிரமப்பட்டு 7 விக்கெட்டுகளை இழந்து, 125 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில் மயங்க் யாதவ் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியை கட்டுப்படுத்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் அபிஷேக் ஷர்மா 8 பந்துகளை சந்தித்தாலும் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் வைபவ் காத்திருந்த தருணம் வந்தது என்று , தனது மின்னல் வேக அதிரடியை தொடங்கினார். 18 பந்துகளில் 4 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகளை பறக்கவிட்டு அதிவேக அரைசதத்தினை கடந்தார். இது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வைபவ் அடிக்கும் முதல் அரைசதமாகும்.
அவர் அடித்த சிக்சர்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களை மலைக்க வைத்தது. இந்த அரைசதம் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அரைசதம் கடந்த,மிக இளைய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை 15 வயது நிரம்பிய வைபவ் செய்துள்ளார். இந்த ஹராரே மைதானம் வைபவிற்கு எப்போதும் சிறப்பான வாய்ப்புகளை கொடுத்துள்ளது. இதற்கு முன்னர் , இந்த ஆண்டு தொடக்கத்தில் U- 19 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இதே மைதானத்தில் நடைபெற்றது. அப்போது வைபவ் மிகவும் அதிரடியாக விளையாடி 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து இந்திய அணி U - 19 உலகக் கோப்பையை வெல்ல காரணமானார்.
இந்த போட்டியில் பேட்டிங்கில் வைபவிற்கு பக்கபலமாக இருந்த இஷாந்த் கிஷன் 34 ரன்களை எடுத்தார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் திலக் வர்மாவும் இணைந்து 13.2 ஓவரில் 126 ரன்களைக் கடந்து வெற்றி பெற்றனர். ஜிம்பாப்வே அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தனது தொடர் தோல்விகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார். இதற்கு முன்னர் ஷ்ரேயாஸ் தலைமையில் தொடர்ச்சியாக இந்திய அணி 2 தொடர்களையும் , 6 போட்டிகளிலும் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் 18 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய மயங்க் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சமீபத்திய காலமாக பவுலிங்கில் கடுமையாக சொதப்பி வந்த இந்திய அணி இந்தப் போட்டியில் நம்பிக்கை கொடுத்துள்ளது. 3 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1–0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.