
எப்போதும் போல இயல்பாக நடந்துக் கொண்டிருந்த ஐபிஎல் டி20 போட்டியில், ஒரு சிறுவன் ஒவ்வொரு பந்தையும் ஏவுகணையை போல வானத்திற்கு பறக்க விட்டுக் கொண்டிருந்தான். மைதானத்தில் அமர்ந்திருந்த பார்வையாளர்களுக்கு அன்றைய போட்டி வாண வேடிக்கையாக இருந்து குதூகலிக்க வைத்தது.
யார்ரா! இந்த பையன்? எப்படி பந்து வீசினாலும், இந்த கிழி கிழிக்கிறானே! என்று அனுபவ பந்து வீச்சாளர்களே அரண்டு போய் நின்றனர். அந்த சிறுவன் சாதாரண பந்து வீச்சாளரின் பந்தை மட்டும் அடி வெளுக்க வில்லை, இந்தியாவின் தலைசிறந்த பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா வீசிய பந்துகளைத் தான் நொறுக்கி கொண்டிருந்தான்.
ஏப்ரல் 28, அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி தான் இத்தகைய அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜெய்ஸ்வாலுடன் களமிறங்கிய 14 வயது சிறுவனான வைபவ் மிகவும் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் 100 ரன்களை அடித்து அனைவரையும் அசர வைத்தான். இதில் 11 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.
ஐபிஎல் டி20 போட்டிகளில் குறைந்த வயதில் மின்னல் வேக சதமடித்த முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார். அதிவேக சதத்தில், 30 பந்துகளில் 100 ரன்களை அடித்த கிரிஸ் கெய்லுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றி மிகவும் எளிதாகியது. அதிலிருந்து அனைவரின் கண்களும் வைபவ் சூர்யவன்ஷியை தான் தேடியது.
யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி?
பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்ததில் உள்ள மோதிபூர் எனும் கிராமத்தில், 27-3-2011 அன்று சஞ்சீவ் சூர்யவன்ஷிக்கும் ஆர்த்திக்கும் மகனாக வைபவ் சூர்யவன்ஷி பிறந்தார். விவசாயியான இவரது தந்தைக்கு சிறுவயதில் இருந்து கிரிக்கெட் விளையாட ஆசை; குடும்பச்சூழலால் ஆசையை கைவிட்டார். ஆயினும் சிறுவயதில் இருந்தே தன் மகன் வைபவிற்கு கிரிக்கெட் விளையாட அவரே பயிற்சி கொடுத்தார்.
4 வயதில் கிரிக்கெட் விளையாட துவங்கிய வைபவ் 8 வயதில் மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டிக்கு தேர்வானார். அவரின் கிரிக்கெட் கனவை நனவாக்க சஞ்சீவ் சூர்யவன்ஷி தனக்கிருந்த சிறிய விவசாய நிலத்தையும் விற்று பயிற்சியளிக்க செலவழித்தார். வைபவிற்கு 4 ஆண்டுகள் மனோஜ் ஓஜா பயிற்சி கொடுத்து மெருகேற்றினார். காலையிலே பயிற்சிக்கு செல்லும் வைபவிற்காக அதிகாலை 4 மணிக்கே எழுந்து, அவரது தாய் உணவு தயாரித்து கொடுப்பாராம். ஒரு நாளைக்கு ஆர்த்தி மூன்று மணிநேரம் தான் தூங்குகிறாள் என்று வைபவ் கூறியுள்ளார். வைபவ்வின் அண்ணன் வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறார்.
வைபவ் 12 வயதில் பீகார் அணிக்காக, ரஞ்சிக் கோப்பை தொடரில் அறிமுகமாகி விளையாடினார். பிறகு வினுமன்கட் கோப்பையிலும் சிறப்பாக விளையாடினார். 19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 58 பந்துகளில் வைபவ் சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்த ஆட்டத்தில் வைபவ் சூரியவன்ஷியினால் ஈர்க்கப்பட்ட, இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமண், ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டிடம் அவரை ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப் பரிந்துரை செய்தார்.
ஐபிஎல் ஏலத்தில் வைபவ்வை ₹1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியது. அவர்கள் நாக்பூரில் உள்ள கிரிக்கெட் உயர் பயிற்சி மையத்துக்கு வைபவை அனுப்பி மேலும் பட்டை தீட்டினார்கள். தற்போதைய ஐபிஎல் தொடரில் ராகுல் திராவிட்டின் சிறப்பான பயிற்சியும் சேர்ந்து, வைபவ் சூர்யவன்ஷியின் திறமையை உலகிற்கு காட்டியுள்ளது.