
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தற்போது ஒரு சிறுவனின் பெயரைத் தான் உச்சரித்துக் கொண்டிருக்கிறது. மிக இளம் வயதில் ஐபிஎல் வாய்ப்பைப் பெற்று, தான் விளையாடிய 3வது போட்டியிலேயே அதிவேக சதமடித்து அசத்தி இருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி. அவ்வகையில் மிகக் குறைந்த வயதில் ஐபிஎல் சதமடித்த 5 வீரர்களை இப்போது பார்ப்போம்.
1. நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் 100 ரன்களைக் குவித்து அசத்தினார் வைபவ் சூர்யவன்ஷி. இதில் பலருக்கும் ஆச்சரியம் அளித்தது என்னவென்றால் இவரது வயது தான். 14 ஆண்டுகள் 32 நாட்கள் வயதுடைய சிறுவன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிரடியான சதத்தைப் பதிவு செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் இள வயதில் சதமடித்த வீரர் என்ற பெயரோடு, குறைந்த பந்துகளில் சதமடித்த இந்திய வீரர் என்ற பெயரையும் தட்டிச் சென்றார் சூர்யவன்ஷி. கிரிக்கெட்டில் இவருக்கு மிகச்சிறந்த எதிர்காலம் உள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
2. இள வயதில் சதமடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் மனீஷ் பாண்டே. 2009 இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 73 பந்துகளில் 114 ரன்களைக் குவித்தார் பெங்களூர் அணி வீரர் பாண்டே. அப்போது இவருடைய வயது 19 ஆண்டுகள் 253 நாட்கள் தான்.
3. தோனிக்குப் பிறகு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இவர் தான் எனக் கருதப்பட்ட ரிஷப் பண்ட், 2018 இல் டெல்லி அணிக்காக தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 63 பந்துகளில் 128 ரன்களைக் குவித்து அசத்தினார் பண்ட். அப்போது இவருடைய வயது 20 ஆண்டுகள் 218 நாட்கள்.
4. ஐபிஎல் தொடரில் அறிமுகமான போது அடுத்த யுவராஜ் சிங் இவர் தான் என்று பலரும் தேவ்தத் படிக்கல்லை புகழ்ந்தனர். 2021 இல் பெங்களூர் அணிக்காக விளையாடிய படிக்கல் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 52 பந்துகளில் 101 ரன்களைக் குவித்தார். அப்போது இவருடைய வயது 20 ஆண்டுகள் 289 நாட்கள்.
5. இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு ஐபிஎல் தொடர் தான் திருப்புமுனையாக அமைந்தது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடியதால் இந்திய அணிக்குத் தேர்வானார். இவர் 2023 இல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 62 பந்துகளில் 124 ரன்களைக் குவித்து அசத்தினார். அப்போது இவருடைய வயது 21 ஆண்டுகள் 123 நாட்கள்.
கிரிக்கெட் தான் இனி எல்லாமே என ஆர்வத்துடன் செயல்படும் இளம் வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் முக்கியமானதாக இருக்கிறது. அதற்கேற்ப இளம் வீரர்களின் சாதனைகள், இன்னும் பல வீரர்களை உருவாக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.