

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி உலகின் அதிக எதிர்ப்பார்ப்பு மிக்க கிரிக்கெட்டராக உருவெடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் 2026-27 சையத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் , சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் பீகார் அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஆடவர் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் அணியை வழிநடத்திய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர், குரோஷியாவைச் சேர்ந்த சாக் வுகுசிக் , 17 வயது மற்றும் 311 நாட்களில் தேசிய அணிக்குத் தலைமை தாங்கியதே இதுவரை சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை 15 வயது மற்றும் 232 நாட்களில் வைபவ் முறியடித்துள்ளார். இந்திய டி20 கிரிக்கெட் அணியில் சமீபத்தில் அறிமுகமாகிய வைபவ் , ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சர்வதேசப் போட்டியில் அறிமுகமாகி 5 மாதங்களே ஆன நிலையில் இந்த பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
தற்போது 2026-27 ரஞ்சி கோப்பைத் தொடர் நடைபெற்ற நிலையில் , தொடரின் முதல் பாதியில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்த பீகார் அணிக்கு, வைபவ் சூர்யவன்ஷியின் வருகை புத்துணர்ச்சி அளித்துள்ளது. ஆனால் , இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த வைபவ் 18 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். இந்த தொடருக்கு பின்னர் , வைபவ் இன்னும் ஒரு உள்ளூர் டி20 போட்டியில் மட்டுமே விளையாட உள்ளார்.
அதற்கு பின்னர் கத்தார் தலைநகர் தோஹாவில் நவம்பர் 19 முதல் தொடங்கவுள்ள 50 ஓவர் ஒருநாள் போட்டி தொடரில் இந்தியா A அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணிக்காக இவர் ஆடிய ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக, தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவுடன் இணைந்து வெறும் 7.1 ஓவர்களிலேயே 133 ரன்கள் குவித்த இக்கூட்டணி ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றது.
அந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி, விரைவாக 19 பந்துகளில் 45 ரன்களைக் குவித்தார். அந்தத் தொடரில் அவர் மொத்தம் இரு டி20 போட்டிகளில் விளையாடி இருந்தார். இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதுவரை பீகார் அணிக்காக எட்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, இதுவரை மொத்தமாக 44 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இதில் குறிப்பாக, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் 23 போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் , கடந்த வருடம் நவம்பரில் நடைபெற்ற ஏசிசி ரைசிங் ஸ்டார்ஸ் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா 'ஏ' அணிக்காகக் களமிறங்கிய அவர், வெறும் 42 பந்துகளில் சதம் அடித்து மிரட்டினார். இதன் மூலம் மூன்றாவது அதிவேக டி20 சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.சிறு வயதிலேயே முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால தூணாக மாறுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.