

இந்தியா - தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், களத்தில் இறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது.
இந்த போட்டியில் விராட்கோலி 120 பந்துகளில் 135 ரன்களை குவித்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து, 11 four மற்றும் 7 சிக்ஸர்களை அடித்து இருந்தார். இதன்மூலம் அவர் டி20 பாணி அதிரடிக்கு திரும்பியிருப்பது ரசிகர்களைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது என்றே சொல்லலாம்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, நீண்ட நாட்களுக்குப் பின் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒருநாள் போட்டியில் விளையாடுவதால் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், ஒரு நாள் போட்டியில் எப்படி விளையாடினாரோ அதே போன்ற ஆட்டத்தை இன்று ராஞ்சியிலும் விராட் கோலி வெளிகாட்டினார். இதன் மூலம் விராட் கோலி, ஒருநாள் போட்டியில் 52-வது சதத்தையும், ஒட்டுமொத்த அளவில் 83-வது சதத்தினை சர்வதேச அரங்கில் பதிவு செய்துள்ளார்.
விராட் கோலிக்கு மிகவும் பிடித்த இந்த ராஞ்சி மைதானத்தில் இரண்டு சதம் அடித்திருந்த நிலையில், தற்போது தனது மூன்றாவது சதத்தையும் நிறைவு செய்துள்ளார்.
இதற்கு முன்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக சதம் அடித்தோர் பட்டியலில் சச்சின், வார்னர் ஆகியோர் 5 சதங்களுடன் முதல் இடத்தில் இருந்த நிலையில், தற்போது கோலி 6-வது சதம் அடித்து வரலாற்று சாதனையை படைத்தார்.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விராட் கோலி 52 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக ஒரு குறிப்பிட்ட சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை உடைத்துள்ள விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.