இந்திய கிரிக்கெட் அணியில் விராட் கோலிக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கின்றனர். தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத பெங்களூர் அணிக்கு, விராட் விளையாடுகிறார் என்ற ஒரே காரணத்திற்காக ரசிகர்கள் இருந்தனர். அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விராட் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அதே நேரம் அதிரடியாக தனது ஓய்வை முடிவையும் ஒவ்வொரு வடிவிலும் எடுத்து வருகிறார்.
சச்சினுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக மாறிய விராட் கோலி, தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் பல மேட்ச்களையும் தொடர்களையும் வென்றுள்ளார். அனைத்து கிரிக்கெட் வடிவங்களிலும் தனது திறனை வெளிப்படுத்தி ஒவ்வொரு வடிவிலும் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் அவர் இருக்கிறார். மேலும் மொத்தமாக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றதிலிருந்து நிறைய தொடர்களை வெற்றி பெற்று கொடுத்துள்ளார்.
விராட் தலைமையில் இந்திய அணி அதிக வெற்றிகளை குவித்த அணியாக மாறியது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்திய அணி, தொடரை இழந்த போது விராட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். 2024 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றவுடன் , டி20 போட்டிகளில் தான் ஓய்வு பெறுவதாக விராட் அறிவித்தார். தற்போது விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.
கிரிக்கெட்டை பொருத்தவரை விராட் பெரும்பாலும் பார்மில் இருப்பதால் , அவரது பேட்டிங் சராசரி வியக்க வைக்கும் வகையில் 58.59 ஆக உள்ளது. அதே போல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,941 என்ற இமாலய ரன்களை குவித்து வைத்துள்ளார். ஐசிசியின் பிளேயர் ஆப் தி இயர், கிரிக்கெட்டர் ஆப் தி இயர் விருதுகளை அதிகம் வென்ற கிரிக்கெட் வீரராக விராட் இருக்கிறார்.
சமீபத்திய காலமாக விராட் கோலியின் சக கிரிக்கெட் வீரரான ரோஹித் சர்மா, ஓய்வு பெறுவதாக வதந்திகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது. சில நேரங்களில் ரோஹித்தை ஓய்வு பெற வைக்க அழுத்தம் கொடுப்பதாகவும் ஊடகங்களில் பேசப்படுகிறது. பெரும்பாலும் விராட் எடுக்கும் முடிவையே ரோஹித்தும் எடுக்கிறார். ரோஹித் மற்றும் விராட் இல்லாமல் சில கிரிக்கெட் தொடர்களில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு அனுபவ வீரர்களின் ஆட்டம் வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில், இந்திய அணிக்கு கைகொடுக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். இவர்களுக்கு பிசிசிஐ கட்டாயம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தனது ஓய்வு குறித்து விராட் கோலி சூசகமாக அறிவித்துள்ளார்.
விராட் ," 2027 உலகக் கோப்பை தொடரே , நான் இந்தியாவிற்காக விளையாடும் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும். இந்த முறை உலக கோப்பையை வெல்வது எனது முழு இலக்காகும். நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன், இந்தியாவுக்காக உலகக்கோப்பையில் விளையாடுவது மிகவும் சிறப்பானது” என்று தெரிவித்திருக்கிறார்.
அதனால், உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் ஓய்வு பெறுவார் என்று பலரும் கருதுகின்றனர். விராட் இந்த உலக கோப்பை தனது இறுதி உலக கோப்பையாக இருக்கும் என்று கூறி இருக்கிறார். அதன் பின்னர் 4 ஆண்டுகள் தொடர்ச்சியாக விளையாட முடியுமா? என்னும் சந்தேகம் இருக்கிறது. ஆயினும் உறுதியாக அவர் ஓய்வு நாளை அறிவிக்கவில்லை.