
சினிமாவிற்கு அடுத்த படியாக விளையாட்டுக்கு தான் அதிகளவு ரசிகர்கள் உள்ளனர். அந்தவகையில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர்களுடன் செல்பி எடுத்துக்கொள்ளவும், அவர்களின் விளையாட்டை நேரடியாக பார்க்கவும் ஆசைப்படுவார்கள். அதேபோல் சில ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் மீதான தங்களது விருப்பங்களை சமூகவளைத்தளங்களில் பதிவு செய்வார்கள். சில நேரங்களில் சில விளையாட்டு வீரர்கள் தங்களது ரசிகர்களின் ஆசைகளை நிறைவேற்றி வைத்துள்ளனர். அப்படி நடந்த ஒரு சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா தனது ரசிகர் ஒருவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளார். அது என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
நீரஜ் சோப்ரா கிளாசிக் சர்வதேச ஈட்டி எறிதல் போட்டி வருகிற 5-ந் தேதி பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவருமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா, தாமஸ் ரோஹ்லர் (ஜெர்மனி), ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரெனடா) உள்பட 12 முன்னணி வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டியை பார்க்க வேண்டும் என்று ஆர்வம் கொண்ட தமிழகத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் என்ற ரசிகர் தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதாவது ‘யாராவது எனக்கு ரூ. 2,000 கொடுத்து உதவி செய்தால், நான் கோவையில் இருந்து பெங்களூருவுக்கு சென்று நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியை நேரில் காண உதவியாக இருக்கும்’ என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலான நிலையில், அந்த பதிவை பார்த்து அதற்கு பதில் அளித்துள்ள நீரஜ் சோப்ரா தனது ‘எக்ஸ்’ தளத்தில்
‘ரஞ்சித், உங்களது நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டிக்கான பயணச் செலவை நான் ஏற்கிறேன். பெங்களூருவில் உங்களுக்கு முக்கிய பிரமுகர்களுக்கான உபசரிப்பு காத்திருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்யும் நட்சத்திர ஓட்டலுக்கு நன்றி. நீங்கள் என்னிடமிருந்து சுமார் 90 மீட்டர் தொலைவில் தங்குவீர்கள். விரைவில் சந்திப்போம்’
என்று குறிப்பிட்டுள்ளார்.
நீரஜ் சோப்ராவின் இந்த செயலை அனைவரும் பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் நீரஜ் சோப்ராவை மிகவும் அருகில் இருந்து பார்க்கும் அந்த ரசிகர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் புகழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே ஈட்டி எறிதலுக்கான புதிய தரவரிசை பட்டியலில் நீரஜ் சோப்ரா மீண்டும் முதலிடலித்தை பிடித்துள்ளார். கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 2-வது இடத்திலும், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 3-வது இடத்திலும், ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷ்தீப் நதீம் 4-வது இடத்திலும் உள்ளனர்.