
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்று வரலாறு படைத்தார். உலக சாம்பியன்ஷிப்பிலும் மகுடம் சூடினார். இதன் மூலம் இவர் இளையோருக்கான உலக ஈட்டி எறிதல் போட்டிகளில் வெற்றியடைந்த முதலாவது இந்திய வீரரும், ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார்.
அதுமட்டுமின்றி 2024-ம் ஆண்டு நிலவரப்படி, நீரஜ் சோப்ரா தனிநபர் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற இரண்டு இந்தியர்களில் ஒருவர், தனிநபர் போட்டியில் இளைய இந்திய ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவர் மற்றும் ஒலிம்பிக்கில் அறிமுகமானபோது தங்கம் வென்ற ஒரே தனிநபர் என்ற பெருமைகளையும் பெற்றுள்ளார்.
2024 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்திற்குப் பிறகு, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பல முறை பதக்கம் வென்ற ஐந்து தனிநபர் வீரர்களில் இவரும் ஒருவர். 2016-ல் 86.48 மீட்டர் தூரம் எறிந்து உலக U-20 சாதனை படைத்தார், தடகளத்தில் உலக சாதனை படைத்த முதல் இந்திய தடகள வீரர் ஆனார். 2016-ம் ஆண்டில் 20 வயதிற்குக் குறைவானோருக்கான உலக ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீ தூரம் எறிந்து இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தினார்.
2018-ல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழாவில் சோப்ரா இந்தியாவுக்கான கொடி ஏந்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது அவரது முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டியாகும். 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
இந்திய தடகள கூட்டமைப்பு (AFI) நாட்டின் மிக உயர்ந்த விளையாட்டு விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னாவிற்கு பரிந்துரைத்த ஒரே தடகள வீரர் நீரஜ் சோப்ரா ஆவார். இவருக்கு 2018-ம் ஆண்டு அர்ஜுனா விருதும், 2022-ல், இந்திய குடியரசின் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
அரியானாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா கடந்த 2016ல் புனேயில் உள்ள இந்திய ராணுவத்தின் 'மிஷன் ஒலிம்பிக்' பிரிவு சார்பில் தேர்வு செய்யப்பட்டார். பின் இந்திய ராணுவத்தில் ஜூனியர் கமிஷன் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2018ல் 'சுபேதாராக' பதவி உயர்வு பெற்ற நீரஜ் சோப்ரா, பின் சுபேதார் மேஜராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து தேசத்துக்கு பெருமை சேர்த்த அவருக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. இந்த நியமனம் ஏப்ரல் 16-ம்தேதி (நாளை) முதல் அமலுக்கு வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் வரும் மே 23-ம்தேதி போலந்தில் நடக்கவுள்ள 71வது ஆர்லன் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா பங்கேற்க உள்ளார். அதனை தொடர்ந்து ஜூன் 24 அன்று செக் குடியரசு நகரில் நடைபெறும் ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் 2025 தடகளப் போட்டியிலும் அவர் பங்கேற்க உள்ளார். காயங்கள் காரணமாக இரண்டு முறை இந்த போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகியது குறிப்பிடத்தக்கது.