கடந்த சில ஆண்டுகளாக பல போட்டிகளில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. சிறிய அணிகளுக்கு எதிரான இவர்களின் தோல்வி, கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. பாகிஸ்தான் அணியின் இந்த மோசமான செயல்பாடு குறித்து அலசுகிறது இந்தப் பதிவு.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல்பாடு சமீப காலமாக படுமோசமாக இருக்கிறது. ஐசிசி தொடர்களில் சிறிய அணிகளிடம் தோல்வி மற்றும் சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வி என பாகிஸ்தான் மிக மோசமாக விளையாடி வருகிறது. சொந்த மண்ணில் வங்கதேசத்திற்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இழந்திருப்பது, பாகிஸ்தான் அணிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. கடைசியாக சொந்த மண்ணில் பாகிஸ்தான் விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 6 தோல்வி மற்றும் 4 டிரா என மோசமாக செயல்பட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை இழந்த போது, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களின் வேகம் எங்கே போனது என் முன்னாள் வீரர்கள் காட்டமாக விமர்சித்தனர். இருப்பினும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வென்று தொடரை பாகிஸ்தான் சமன் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நினைத்தது ஒன்று; நடந்தது வேறு. இரண்டாவது போட்டியில் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றும் தோல்வியைத் தழுவி, தொடரையும் இழந்துள்ளது பாகிஸ்தான். வங்கதேசத்தைப் பொறுத்தவரை இந்த வெற்றி அவர்களின் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட தகுதி வாய்ந்தது.
தொடரை இழந்த பாகிஸ்தான் அணியை முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தரம் படுமோசமான நிலையில் உள்ளது என வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளில் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் வெற்றியைக் கூட பெறாத பாகிஸ்தான் அணிக்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “நாம் பயணித்து வரும் பாதையானது மாறிவிட்டது. வேகப்பந்து வீச்சிற்கு பெயர் போன பாகிஸ்தான் இப்போது இல்லை. ஒரு ரசிகனாகவும், முன்னாள் பாகிஸ்தான் வீரராகவும் இது எனக்கு அவமானமாக இருக்கிறது. படுமோசமாக இருக்கும் பாகிஸ்தான் அணியில், ஒரு வீரர் காயமடைந்தால் தரமான மாற்று வீரர் கூட நம்மிடம் இல்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் கூட தரமான வீரர்கள் இல்லை என்பது கவலையளிக்கிறது. இது நமது அணியின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல” என்று வாசிம் அக்ரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அடுத்ததாக வருகின்ற அக்டோபர் மாதத்தில் இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் சந்திக்கிறது பாகிஸ்தான். இம்முறையாவது வெற்றிக்கனியைத் தட்டிப் பறிப்பார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் கடந்த முறை இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு வந்த போது 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆகையால் அதற்கு பழிதீர்க்கும் வகையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி வாகை சூடும் அளவிற்கு செய்லபட வேண்டும் என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.