
இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரராக இருப்பவர் சுப்மன் கில். அடுத்த கோலி என்றும் இவர் கிரிக்கெட் விமர்சகர்களால் பாராட்டப்படுகிறார். சில மாதங்களுக்கு முன்பு வரை பேட்டிங்கில் ரன் குவிக்கத் தடுமாறி வந்த இவர், இப்போது ரன்களைக் குவிப்பதில் மெஷினாக செயல்பட்டு வருகிறார். சுப்மன் கில்லின் இந்த முன்னேற்றத்திற்கு காரணமே இந்திய முன்னாள் வீரர் ஒருவர் தான். சுப்மன் கில் ரன் குவிக்க உதவிய அந்த முன்னாள் வீரர் யார் தெரியுமா?
கடந்த சில ஆண்டுகளாக இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் நிரந்தரமாக இடம் பிடித்து விட்டார் சுப்மன் கில். இருப்பினும் கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரன்களைக் குவிக்கத் தவறி விட்டார். இந்நிலையில், மீண்டும் சுப்மன் கில் தனது பேட்டிங் திறமையை மேம்படுத்த ரஞ்சி டிராபியில் பங்கேற்றார்.
ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய சுப்மன் கில், கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். அதோடு இழந்த ஃபார்மையும் மீட்டெடுத்தார். அதன்பிறகு நடைபெற்ற ஆட்டங்களில் தொடர்ந்து ரன்களைக் குவித்து வருகிறார் சுப்மன் கில். இவரின் ரன் குவிப்புக்கு முக்கிய காரணமே பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக செயலாற்றிய வாசிம் ஜாபர் தான்.
சுப்மன் கில்லின் சமீபத்திய ஃபார்ம் குறித்து பேசிய வாசிம் ஜாபர், “ஒரு இளம் வீரர் வலை பயிற்சியில் அதிக நேரத்தை செலவிடுவது நல்ல விஷயம். அதைத் தான் சுப்மன் கில் செய்தார். ஒவ்வொரு போட்டிக்கும் முன்னதாக சுமார் 30 முதல் 45 நிமிடங்கள் வரை பயிற்சி மேற்கொண்டார். ஆஸ்திரேலிய தொடரில் ரன் குவிக்காததைப் பற்றியெல்லாம் நான் அவரிடம் கேட்கவில்லை. பேட்டிங்கில் சிறப்பாக விளையாட சின்ன சின்ன யுக்திகளை மட்டுமே நான் சொல்லிக் கொடுத்தேன். அதனை நன்றாக புரிந்து கொண்ட கில், தற்போது ரன் குவிப்பில் சிறப்பானவராக திகழ்கிறார்.
பேட்டிங்கில் அதிக நேரம் விளையாடுவது சுப்மன் கில்லிற்கு மிகவும் பிடிக்கும். ரஞ்சி டிராபியில் முதல் இன்னிங்ஸில் ரன் குவிக்காவிட்டாலும், இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து மீண்டு வந்துள்ளார் கில். இதன்மூலம் அவரது நம்பிக்கையும் அதிகரித்துள்ளது. இதைத் தான் நானும் இவரிடம் எதிர்பார்த்தேன். அவசரப்படாமல் மிகவும் பொறுமையுடன் விளையாடுவதில் சுப்மன் கில் வல்லவர்,” என்றுதெரிவித்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசிய சுப்மன் கில், தொடர் நாயகன் விருதையும் வென்றார். தற்போது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார் கில்.
எப்பேற்பட்ட வீரராக இருந்தாலும், ஒருசில நேரங்களில் ஃபார்மை இழந்து ரன் குவிக்கத் தடுமாறுவது வழக்கம் தான். சச்சின், ஷேவாக், கங்குலி மற்றும் கோலி வரை பல வீரர்கள் இந்த நிலையைக் கடந்து வந்தவர்கள் தான். ஆனால், அதிலிருந்து எவ்வளவு விரைவாக மீள்கிறோம் என்பது தான் முக்கியம். அவ்வகையில் சுப்மன் கில் வெகு விரைவிலேயே தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்துள்ளார்.