இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா, அடுத்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் போட்டியுடன் ஓய்வு பெற அதிக வாய்ப்புள்ளது. அவருக்குப் பின் இந்திய அணி கேப்டனாக வரும் வாய்ப்பு யாருக்கு இருக்கிறது என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரராக இருக்கும் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி நடப்பாண்டில் டி20 உலகக்கோப்பையை வென்றது. இத்துடன் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் அடுத்த டி20 கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமித்தது பிசிசிஐ. தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்டில் மட்டும் விளையாடி வரும் ரோஹித்தின் அடுத்த இலக்கு சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தான். தற்போது 37 வயதாகும் ரோஹித் சர்மா, எப்போது வேண்டுமானாலும் டெஸ்ட் ஓய்வு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறலாம். இவரது ஓய்வுக்குப் பிறகு அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கி விட்டது.
டெஸ்ட் கேப்டன் ரேஸில் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் சுப்மன் கில் ஆகியோருடன் தற்போது ரிஷப் பண்ட் பெயரும் அடிபடுகிறது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். இதில் தன்னால் முடிந்தவரை நல்ல கேப்டன்ஷிப்பைக் கொடுத்திருந்தார் பும்ரா. பௌலர்களுக்கு மட்டும் கேப்டன் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என சமீபத்தில் தனது ஆதங்கத்தையும் பும்ரா வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சுபமன் கில்லை துணைக் கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. இதனால் அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு சுப்மன் கில்லுக்குத் தான் அதிகம் என பரவலாக பேசப்பட்டு வருகிறது. இருப்பினும் காயத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் தனது சிறப்பான செயல்பாட்டின் மூலம் நானும் களத்தில் இருக்கிறேன் என பிசிசிஐ-க்கு சொல்லால் சொல்லி விட்டார்.
சுப்மன் கில் மூன்று வடிவக் கிரிக்கெட்டிற்கும் பொருத்தமான வீரர் என தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஏற்கனவே தெரிவித்து இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சமீபத்தில் இவரின் பேட்டிங் செயல்பாடு நன்றாக இருந்தாலும், டி20 உலகக்கோப்பையை வென்ற அணியில் கில் இடம்பெறவில்லை. இருப்பினும், பிசிசிஐ சுப்மன் கில் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளது.
வேகப்பந்து வீச்சில் கவனம் செலுத்தி வரும் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு கேப்டனாகும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. உலக அளவில் சிறந்த பந்துவீச்சாளர் என்ற பெயரைத் தக்கவைத்துக் கொள்ள அவர் இன்னும் பல போட்டிகளில் விளையாட வேண்டி இருக்கிறது. ஆகையால் கேப்டன் ரேஸில் பும்ரா இருந்தாலும், வாய்ப்பு குறைவு தான்.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவ்வப்போது ஃபீல்டிங் செட் செய்த ரிஷப் பண்ட், பேட்டிங்கிலும் சதம் அடித்து அசத்தியுள்ளார். டெஸ்டில் தோனி இடத்தை இவர் நிரப்புவார் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரரான தினேஷ் கணேரியாவும் ரிஷப் பண்ட் கேப்டன் பதவிக்கு சரியான தேர்வாக இருப்பார் எனத் தெரிவித்துள்ளார். இவரது விவேகமான விக்கெட் கீப்பிங் மற்றும் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றைப் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. வருங்காலத்தில் இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வலம் வருவார் என்றும் கணேரியா தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கேப்டன் அந்தஸ்து யாருக்குச் செல்லும் என்பது, ரோஹித்தின் ஓய்வுக்குப் பிறகே தெரிய வரும். அதற்கு இன்னும் ஒருசில மாதங்களே அல்லது ஆண்டுகளோ ஆகலாம்.