
அதிரடிக்குப் பெயர் போன ஐபிஎல் தொடரில் ஆல்ரவுண்டர்கள் தங்கள் பங்களிப்பை முழுமையாக கொடுக்க நினைப்பார்கள். தற்போதைய காலகட்டத்தில் அப்படியான ஒரு வீரர் தான் க்ருணால் பாண்டியா. இவரது தம்பியான ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டராக இந்திய அணியில் ஜொலிக்கிறார். அதோடு மும்பை அணியையும் கேப்டனாக வழிநடத்துகிறார். க்ருணால் பாண்டியாவும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அணியின் வெற்றிக்குப் பங்களித்து வருகிறார்.
ஸ்பின்னர்களும் பவுன்சர் பந்துகளை வீச முடியும் என ஐபிஎல் தொடரில் காட்டியவர் இவர் தான். நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியில் விளையாடி வரும் க்ருணால் பாண்டியா, கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியில் பவுன்சரை வீசினார். இதனைக் கண்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆச்சரியம் அடைந்தது. ஒரு ஸ்பின்னரால் எப்படி இந்த அளவிற்கு பவுன்சரை வீச முடியும் என்று விவாதிக்கத் தொடங்கி விட்டனர். பெங்களூர் அணிக்காக பௌலிங்கில் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார் க்ருணால் பாண்டியா.
ஐபிஎல் தொடரில் வீரர்கள் பயமில்லாமல் விளையாடுகின்றனர். விக்கெட்டை இழந்தால் கூட அடுத்து வரும் வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற தைரியம் பலருக்கும் வந்து விட்டது. அதற்கேற்ப இம்பேக்ட் பிளேயர் விதியும் இதற்கு சாதகமாக இருக்கிறது. இதனால் ஸ்பின் பௌலர்கள் பவுன்சர்களை வீச பழக வேண்டும் என க்ருணால் பாண்டியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “விளையாட்டில் வெற்றி பெறுவது எப்போதும் திருப்திகரமான மனநிலையை உருவாக்கும். நமது கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் போது, நிச்சயமாக அது நேர்மறையான எண்ணங்களை ஊக்குவிக்கும். விக்கெட்டுகள் சரியும் போது ரன் குவிப்பதில் பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது. அவ்வகையில் விராட் கோலி போன்ற சேஸ் மாஸ்டர் நமக்குத் துணையாக இருக்கும் போது, எல்லாமே எளிதாக இருக்கும்.
ஒரு பந்துவீச்சாளராக நான் மற்றவர்களைக் காட்டிலும் ஒருபடி மேலே இருக்க வேண்டும் என நினைப்பேன். அதற்கேற்ப பந்துவீசி ரன்களைக் கொடுப்பதில் சிக்கனத்துடன் இருப்பேன். பேட்ஸ்மேன்களின் பலத்தை எனக்கு பலமாக மாற்றிக் கொள்ள முயற்சிப்பேன். வைட் யார்க்கர் மற்றும் பவுன்சர்களை வீசி நான் தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். பயமின்றி விளையாடும் பேட்ஸ்மேன்களை எதிர்கொள்ள, அனைத்து ஸ்பின்னர்களும் ஒருபடி மேலே சென்று பவுன்சர் பந்துகளை வீச முன்வர வேண்டும். நானும் இதைத் தான் களத்தில் முயற்சி செய்து வருகிறேன்” என க்ருணால் பாண்டியா கூறினார்.
2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக அறிமுகமானார் க்ருணால் பாண்டியா. தனது சிறப்பான ஆட்டத்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே இந்திய டி20 அணியிலும் இடம் பிடித்து விட்டார். இடது கை சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பேட்டராக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
தற்போது பெங்களூர் அணியில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரை வீசி வெற்றி பெறச் செய்தார். அதோடு டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.