
ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தனது ஆட்டத் திறனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவார்கள். இருப்பினும் ஏதாவது ஒரு கட்டத்தில் ஃபார்மை இழந்து சரியாக விளையாட முடியாத சூழல் ஏற்படும். இம்மாதிரியான கடினமான சூழலை சமாளித்து, கடந்து வந்தால் மீண்டும் நன்றாக விளையாடலாம். இல்லையேல் ஓய்வு பெறுவது ஒன்றே வழி. வீரர்கள் இன்னும் சில காலம் விளையாடலாம் என்று நினைத்தால் கூட ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்கள். அப்படியான ஒரு சூழலில் தான் தற்போது ரோஹித் சர்மா இருக்கிறார்.
சமீப காலமாக ரன் குவிப்பில் தடுமாறி வரும் ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்படவில்லை. குறைந்த ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுப்பதால், ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்து விட்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணத்தில் ரோஹித் இல்லை. ஏனெனில் அடுத்து வரவிருக்கும் 2027 உலகக்கோப்பை வரை விளையாடுவார் என்றே தெரிகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காத நிலையில் ரோஹித் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்றால், ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை ரோஹித் ஓய்வு பெறாமல் இதே நிலையில் ஆட்டத்தைத் தொடர்ந்தால், ரசிகர்களே ‘ஓய்வு பெறுங்கள் ரோஹித்’ என சொல்லத் தொடங்கி விடுவார்கள். இந்நிலையில் ரோஹித் சர்மாவுக்கு இந்தியாவின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர ஷேவாக் ஒரு அறிவுரையை வழங்கியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ரோஹித் ரன் குவிக்கத் தடுமாறும் நிலையில், அவர் ஓய்வு பெறும் நேரம் வந்துவிட்டது. அனைவருக்குமே இது கடினமான சூழல் தான். ரோஹித் களத்திற்கு வந்தால் முதல் 10 பந்துகளை நிதானமாக ஆட வேண்டியது அவசியம். அதோடு புல் ஷாட்டுகளை ஆடாமல் தவிர்க்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் சிறிது நேரம் கூடுதலாக களத்தில் இருக்கலாம். களத்தில் நின்று விட்டால், பிறகு கூட ரன் ரேட்டை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.
நான் ஃபார்மில் இல்லாத போது, அதிரடியாக ஆடத் தொடங்கி விரைவில் அவுட் ஆகி விடுவேன். அந்நேரத்தில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகிய மூவருமே என்னை தொடக்கத்தில் நிதானமாக ஆடச் சொன்னார்கள். அதேபோல் ரோஹித் சர்மாவிடமும் யாராவது நிதானமாக ஆடும்படி சொல்ல வேண்டும். அப்போது தான் ரோஹித்தின் ஆட்டம் மேம்படும்” என ஷேவாக் அறிவுரை வழங்கியுள்ளார்.