

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். ஒரு நல்ல பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடுவதற்கு திறமை மட்டும் போதாது; அவர் பயன்படுத்தும் கிரிக்கெட் பேட்டின் தரமும் முக்கியமானது. ஆனால், நாம் தினமும் பார்க்கும் இந்த கிரிக்கெட் பேட் எந்த மரத்தில் தயாரிக்கப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது.
உண்மையில், கிரிக்கெட் பேட் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மரம் மிகவும் தனித்துவமானது.
பொதுவாக கிரிக்கெட் பேட் வில்லோ (Willow) எனப்படும் மரத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மரம் மிகவும் இலகுவானதும், அதே நேரத்தில் உறுதியானதும் ஆகும். எனவே, பந்து தாக்கும் போது அதிர்வை குறைத்து, பேட்ஸ்மேனுக்கு நல்ல கட்டுப்பாட்டை இது வழங்குகிறது.
வில்லோ மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பேட்கள் இரண்டு முக்கிய வகைகளாக உள்ளன. ஒன்று இங்கிலீஷ் வில்லோ மற்றொன்று காஷ்மீர் வில்லோ.
உலகின் பெரும்பாலான சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பேட் இங்கிலீஷ் வில்லோ மரத்தில் செய்யப்பட்டதாக இருக்கும். இந்த மரம் பெரும்பாலும் இங்கிலாந்தில் வளர்க்கப்படுகிறது.
இந்த மரத்தின் முக்கிய சிறப்புகள்:
இங்கிலீஷ் வில்லோ மரம், மிகவும் இலகுவானது. பந்தின் தாக்கத்தை நன்றாக தாங்கும் தன்மையுடையது. அதிக பவர் கொடுக்கும் மற்றும் நீண்ட காலம் நீடிக்கும். அதனால் தான் கிரிக்கெட் வீரர்கள் இந்த வகை பேட்களை விரும்பி பயன்படுத்துகின்றனர். இங்கிலீஷ் வில்லோ பேட்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கும்.
காஷ்மீர் வில்லோ பொதுவாக பயன்படுத்தப்படும் பேட் வகையாகும். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் கிரிக்கெட் பேட் காஷ்மீர் வில்லோ மரத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த மரம் இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் அதிகமாக வளரும். காஷ்மீர் வில்லோ, இங்கிலீஷ் வில்லோவைக் காட்டிலும் சற்று கனமாக இருக்கும். விலை குறைவாக இருக்கும். இந்த வகை பேட் தொடக்க நிலை வீரர்களுக்கு ஏற்றது. ஆகையால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக காஷ்மீர் வில்லோ பேட்களை பயன்படுத்துகிறார்கள்.
கிரிக்கெட் பேட் எப்படி தயாரிக்கப்படுகிறது?
வில்லோ மரத்தை வெட்டிய பிறகு அதை நேரடியாக பேட் ஆக மாற்ற முடியாது. அதற்காக பல கட்ட செயல்முறைகள் உள்ளன.
முதலில் மரம் துண்டுகளாக வெட்டப்படுகிறது. பின் அது பல மாதங்கள் உலர வைக்கப்படுகிறது. பிறகு, பேட் வடிவில் (clefts) வெட்டப்படுகிறது. பின்னர் அழுத்தி வடிவமைக்கப்படுகிறது.
கடைசியில் ஹேண்டில் பொருத்தி மென்மையாக பாலிஷ் செய்யப்படுகிறது. இந்த முழு செயல்முறை பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம்.
ஏன் வில்லோ மரம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது?
வில்லோ மரத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது. இது பந்து தாக்கும் போது அதிர்வை உடனடியாக உறிஞ்சி மீண்டும் சக்தியாக திருப்பி விடும். இதனால் பேட்ஸ்மேனுக்கு பெரிய ஷாட்டுகளை அடிக்க உதவுகிறது.
மேலும் மரத்தின் நார் அமைப்பு மிகவும் நேர்த்தியானது. இது பந்து தாக்கும்போது உடையாமல் தாங்கும். அதோடு, எடை குறைவாக இருக்கும். இந்த காரணங்களால் கிரிக்கெட் பேட் தயாரிக்க வில்லோ மரம் உலகளவில் சிறந்ததாக கருதப்படுகிறது.
ஒரு உயர்தர இங்கிலீஷ் வில்லோ கிரிக்கெட் பேட்டின் விலை சில நேரங்களில் ₹20,000 முதல் ₹1,00,000 வரை கூட இருக்கலாம். பல சர்வதேச வீரர்கள் தங்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் தயாரிக்கப்பட்ட பேட்களையே பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.