அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரின் தேதி குறித்தான செய்திகள் கசிந்துள்ளன. இதனால் ரசிகர்கள் ஒரு பெரிய லீக்கிற்கு தயாராகிவிட்டனர்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பல எதிர்பார்ப்புகளுக்கும் ட்விஸ்ட்களுக்கும் நடுவே விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று கேப்டன்கள் சாதாரண வீரர்களாக அணியில் விளையாடினர். விராட் கோலி, தோனி மற்றும் ரோஹித் ஷர்மா. தோனி தனது பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்தார்.
ஆனால், மும்பை அணி நிர்வாகமே ரோஹித் கேப்டன் பதவியை ஹார்திக் பாண்டியாவிடம் கொடுத்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. ஹார்திக் பாண்டியா மிகவும் வருத்தப்பட்டார். பின் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெறுவதில் பாண்டியா சிறப்பான பங்களிப்பை கொடுத்ததன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதைக் கவர்ந்தார்.
இந்தாண்டு ஐபிஎல் தொடர் இப்படி பல இன்னல்கள் மற்றும் சந்தோஷமான விஷயங்களுக்கிடையே முடிந்தது. பின்னர் சில மாதங்களிலேயே அடுத்த ஆண்டிற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. பிசிசிஐ விதிகளை அறிமுகப்படுத்தியது. அணி தக்கவைப்பு, ஏலத்தின் விதிகள் ஆகியவற்றை அறிவித்தது. இப்படியான நேரத்தில் நாளை மறுநாள் மெகா ஏலம் தொடங்கவிருக்கிறது.
இப்போதே நவம்பர் முடியப்போகிறது. இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் வந்துவிடும். ஆகையால் பிசிசிஐ ஐபிஎல் தொடருக்கான தேதி மற்றும் அட்டவணை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறது.
அதன்படி அடுத்த வருடம் மார்ச் 14ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் மே மாதம் 25ஆம் தேதி போட்டிகள் முடிவடையும்.
மேலும் 2026 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர் மார்ச் 15 முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 2027 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடர் மார்ச் 14ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் முழு அட்டவணை, அதாவது தேதி, இடம், நேரம் ஆகியவற்றை விரைவில் பிசிசிஐ வெளியிடவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.