எங்கப்பா போச்சு உங்க வேகம்? பாகிஸ்தான் பௌலர்களை சீண்டும் முன்னாள் வீரர்கள்!

Pakistan
Pakistan
Published on

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த சில ஆண்டுகளாக தோல்விப் பாதையில் பயணித்து வருகிறது. இதனை கடுமையாக விமர்சித்து வரும் முன்னாள் வீரர்கள் வேகப்பந்து வீச்சாளர்களை குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் பலமே வேகப்பந்து வீச்சு தான். ஒரு காலத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் இம்ரான் கான் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் எதிரணிகளை தங்களது வேகத்தால் மிரள வைத்தனர். இவர்களின் காலத்திற்குப் பிறகும் கூட பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சு சிறப்பாகவே இருந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற முடியாமல் தவித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமே வேகப்பந்து வீச்சாளர்களின் வேகம் குறைந்தது தான் என முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் குற்றம் சாட்டகின்றனர்.

சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி தோல்வியைச் சந்தித்தது. இது கிரிக்கெட் வரலாற்றில் வங்கதேசத்தின் எழுச்சியை உறுதிப்படுத்தினாலும், பாகிஸ்தானின் வீழ்ச்சி தொடர்ந்து கொண்டிருப்பதை உணர்த்துகிறது. ஐசிசி தொடர்களிலும் பாகிஸ்தான் அணியால் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. கடந்த டி20 உலகக் கோப்பையில் கூட சிறிய அணியான அமெரிக்காவிடம் தோற்று லீக் சுற்றோடு வெளியேறியது பாகிஸ்தான்.

வங்கதேசத்திற்கு எதிரான தற்போதைய டெஸ்ட் தோல்வியால், பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வர வேண்டுமானால், அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளை வென்று பாகிஸ்தான் தொடரைக் கைப்பற்ற வேண்டியது அவசியமாகும். இல்லையெனில் சொந்த மண்ணில் வங்கதேசத்தையே சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணியால், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எப்படி வீழ்த்தும் என்று முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா விமர்சித்துள்ளார்.

மேலும் இவர் கூறுகையில், “பாகிஸ்தான் அணியின் வேகத்தை உடைத்ததே இந்திய அணி தான். வேகப்பந்து வீச்சை அடித்து ஆடி விட்டால், அவர்களால் அடுத்து எழுந்திருக்கவே முடியாது என்பதை கடந்த ஆசியக் கோப்பைப் தொடரிலேயே உலகிற்கு காட்டி விட்டனர். இனி வேகப்பந்து வீச்சாளர்களை நம்பி எந்தப் பலனுமில்லை. கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும். அப்போது தான் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட முடியும்” என்றார்.

இதையும் படியுங்கள்:
இளம் கிரிக்கெட் வீரர்களை எச்சரிக்கும் அஸ்வின்!
Pakistan

பாகிஸ்தானின் தோல்வி குறித்து முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கூறுகையில், “பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்கள் வங்கதேசத்தைக் கட்டுப்படுத்த தவறியதே தோல்விக்கு காரணம். ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரைப் பாருங்கள். காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகும் அவர்களின் வேகம் மட்டும் குறையவில்லை. ஆனால் ஷாஹீன் அப்ரிடி, நசீம் மற்றும் குர்ராம் போன்ற பாகிஸ்தான் வீரர்களின் வேகம் வெகுவாக குறைந்து விட்டது. தொடக்கத்தில் 145கி.மீ. வேகத்தில் வீசிய இவர்கள் தற்போது 130கி.மீ வேகத்தில் தான் பந்து வீசுகிறார்கள். வேகம் தான் நம்முடைய பலம் என்று உலக நாடுகளுக்குத் தெரியும். ஆனால் அந்த வேகம் இப்போது எங்கே போனது” என்று அவர் விமர்சித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com