
உலக கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் அனைத்தும், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தும். சமீபத்திய காலத்தில் இவ்விரு அணிகளுக்கும் இடையே இருதரப்பு தொடர்கள் ஏதும் நடைபெறுவது இல்லை. ஐசிசி தொடர்கள் மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் பெரும்பாலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடுவதால், பாகிஸ்தான் அணி மீது கடும் விமர்சனங்கள் எழுகின்றன. ஆனால், இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் எது சிறந்த அணி என்பதை முடிவு செய்ய ஒரு சவால் விடுத்திருக்கிறார் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்தாக்.
ஒருநாள் உலகககோப்பை கிரிக்கெட்டில் இதுவரை இந்திய அணியை பாகிஸ்தான் தோற்கடித்ததே கிடையாது. இதில் 8 முறை இந்திய அணியே வென்றுள்ளது. சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் 3 வெற்றிகளும், இந்தியா 2 வெற்றிகளும் பெற்றுள்ளன. டி20 உலகக்கோப்பையில் இந்தியா 7 முறையும், பாகிஸ்தான் 1 முறையும் வென்றுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியா - பாகிஸ்தான் மோதிய ஐசிசி போட்டிகளில் இந்தியா 17 வெற்றிகளுடனும், பாகிஸ்தான் 4 வெற்றிகளுடனும் உள்ளன.
பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் தோற்கும் போதெல்லாம், அந்நாட்டு முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சிப்பது வழக்கம். இருப்பினும் ஒருசில வீரர்கள் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார்கள். அதில் ஒருவர் தான் சக்லைன் முஸ்தாக். இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளில் எது சிறந்த அணி என்பதை, எப்போதாவது நடைபெறும் ஒரு போட்டியை வைத்து மட்டுமே முடிவு செய்யக் கூடாது என முஸ்தாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “குறைந்தபட்சம் 30 போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதினால் சிறப்பான அணி எது என்பதை இந்த உலகம் உணரும். இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ஆனால் 10 டெஸ்ட், 10 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடட்டும். அப்போது தெரிந்து விடும் அல்லவா சிறந்த அணி எதுவென்று. பிரச்சினைகளைத் தீர்த்து, சரியான திட்டமிடலுடன் தயாராகும் பட்சத்தில், பாகிஸ்தான் அணியின் வலிமையை இந்தியா உள்பட கிரிக்கெட் உலகமே அறிந்து கொள்ளும்” என்று கூறியுள்ளார் முஸ்தாக்.
30 போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடினால் அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஆனால் இது முற்றிலும் சாத்தியமில்லை என்பதே நிதர்சனம். இருப்பினும் இருநாட்டுக்கும் இடையில் இருதரப்பு தொடர்கள் நடந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலாவது இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. ஆனால், டெஸ்ட் போட்டி பல ஆண்டுகளாக நடக்காமலேயே இருக்கிறது. ஒருவேளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுமே, டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும் போலிருக்கிறது.
அடுத்ததாக இந்தியாவும், பாகிஸ்தானும் வருகின்ற அக்டோபர் மாதத்தில் டி20 வடிவிலான ஆசிய கோப்பையில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.