தோனிக்கு பிடித்த பௌலர் மற்றும் பேட்ஸ்மேன் யார் தெரியுமா?

Dhoni
Dhoni
Published on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியிடம், உங்களுக்கு பிடித்த இந்திய பேட்ஸ்மேன் மற்றும் பௌலர் யார் என்று சமீபத்தில் கேட்கப்பட்டது. இதற்கு தோனி கூறிய சுவாரஸ்யமான பதில் என்ன என்பதை இப்பதிவில் காண்போம்.

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்றால் அது எம்.எஸ்.தோனி தான். டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப் தொடர் வருதற்கு முன்பாக ஐசிசி நடத்திய 3 விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி மட்டுமே. 2007 ஆம் ஆண்டில் ஐசிசி நடத்திய முதல் டி20 உலகக்கோப்பை, 2011 ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று முப்பெரும் கோப்பைகள் இந்தியாவிற்கு சொந்தமானது தோனியின் காலகட்டத்தில் தான். கபில்தேவுக்கு அடுத்து உலகக்கோப்பையை வென்ற கேப்டனும் இவரே. 

உலகக்கோப்பையை வென்றவர் ஐபிஎல் கோப்பைகளை விட்டு வைப்பாரா என்ன! சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார். இதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் தொடரில் விளையாடிய டாப் அணிகள் மோதிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை, தோனியின் தலைமையின் கீழ் இரண்டு முறை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சமீபத்தில் நடந்து முடிந்த 9வது டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இத்தொடரின் இறுதிப்போட்டியைப் பார்த்து, இதை விட சிறந்த பிறந்தநாள் பரிசு எனக்கு எதுவும் இருக்க முடியாது எனக் கூறி இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார் தோனி. இந்நிலையில் உங்களுக்கு மிகவும் பிடித்த இந்திய பௌலர் யார்? இந்திய பேட்ஸ்மேன் யார்? என்று தோனியிடம் கேட்கப்பட்டது.

Dhoni_Bumrah
Dhoni_Bumrah

இதற்கு பதிலளித்த தோனி, “தற்போதைய சூழலில் எனக்கு மிகவும் பிடித்த பௌலர் என்றால் அது ஜஸ்பிரீத் பும்ரா தான். இவரது வேகமும், துல்லியமான யார்க்கரும் அபாரமாக உள்ளது. எதிரணிகள் பயம் கொள்ளும் விதமாக இவரது பந்து வீச்சு சிறப்பாக இருக்கிறது.

இந்திய பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை அனைவருமே சிறப்பாக பேட்டிங் செய்து வருகின்றனர். குறிப்பிட்டு ஒருவரை மட்டுமே சொல்வது என்பது இயலாத காரியம். இருப்பினும் தற்போதைய நிலையில் ஒருவர் மிகச் சிறப்பாக விளையாடுகிறார் என்று நினைக்கும் போது, இன்னொரு வீரரும் சிறப்பான பங்களிப்பை அளித்து வெற்றிக்கு உதவுகிறார். ஆகையால், சிறந்த பேட்ஸ்மேனை நான் தேர்வு செய்ய விரும்பவில்லை. அனைவரும் தொடர்ந்து ரன் குவிக்கவே நான் விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பௌலர் குறித்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் கூறிய தோனி, பிடித்த பேட்ஸ்மேன் குறித்த கேள்விக்கு சுவாரஸ்யமான பதிலை அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
எம்.எஸ்.தோனிக்கும் ஸ்வப்னில் குசாலேவுக்கும் அப்படி என்ன ஒற்றுமை?
Dhoni

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் வளர்ச்சியில் தோனிக்கு நிறையவே பங்குண்டு. மேலும் பல இளம் வீரர்களை வளர்த்து விட்ட தோனி, ஃபீல்டிங் செட் செய்வதிலும், வேகமாக விக்கெட் கீப்பிங் செய்வதிலும் கில்லாடியாக இருந்துள்ளார். பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 2025 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com