
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதும், 3 வடிவிலான கிரிக்கெட்டிற்கும் இந்திய அணிக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட ரோஹித், டெஸ்ட் போட்டிகளில் சொல்லிக் கொள்ளும் படி செயல்படவில்லை. கடந்த ஆண்டு டி20 உலக்கோப்பை மற்றும் நடப்பாண்டில் சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தார் ரோஹித் சர்மா.
டி20 போட்டிகளில் கடந்த ஆண்டே ஓய்வு பெற்ற நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்று விட்டார். ரோஹித் சர்மா ஓய்வைத் தொடர்ந்து இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன் ரோஹித் சர்மா விளையாடாத சமயத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.
ரோஹித் ஓய்வு பெற்று விட்டதால் அடுத்த கேப்டன் பும்ராவாக தான் இருப்பார் என பலரும் நினைக்க, பிசிசிஐ ஒரு இளம் கேப்டனை தேடுவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு பும்ரா அடிக்கடி காயத்தில் சிக்குவதால் கேப்டன் பதவியை கொடுக்க பிசிசிஐ தயங்குகிறது.
டெஸ்ட் கேப்டன் ரேஸில் பும்ராவுக்கு அடுத்த இடத்தில் சுப்பன் கில் தான் உள்ளார். ஏற்கனவே ஒருநாள் இந்திய அணிக்கு துணை கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில், டெஸ்ட் போட்டிக்கும் கேப்டனாகும் வாய்ப்பு அதிகமுள்ளது. ஐபிஎல் தொடரில் கடந்த 2 சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியையும் கேப்டனாக வழிநடத்தி வருகிறார் கில். இந்நிலையில் பிசிசிஐ தேடும் இளவயது கேப்டன் சுப்பன் கில் தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் வெள்ளைப் பந்து மற்றும் சிவப்பு பந்து கிரிக்கெட்டிற்கு அதிக வித்தியாசங்கள் உள்ளன. டெஸ்ட் போட்டியில் போதிய அனுபவம் இல்லாத ஒருவரால், அணியைத் திறம்பட வழிநடத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக இருந்த சமயம், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்று சாதனைப் படைத்தது இந்தியா. களத்தில் ஆக்ரோஷமாக செயல்படக் கூடிய் கோலி போன்ற கேப்டன் தான் இந்தியாவிற்கு தேவை. இதனை ஏற்கனவே பல முன்னாள் வீரர்கள் தெரிவித்து விட்டனர்.
மீண்டும் விராட் கோலியை கேப்டனாக்க பிசிசிஐ முன்வர வேண்டும். ஆனால் அது நடக்காத விஷயம். ஏனெனில் ரோஹித் சர்மா விளையாடாத நேரத்தில் கோலியை விடுத்து பும்ராவைத் தான் கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. இதற்கும் ஒரு காரணம் உண்டு.
கேப்டனாகும் வாய்ப்பு பௌலர்களுக்கு மட்டும் ஏன் கிடைப்பதில்லை என பும்ரா ஒருமுறை தெரிவித்தார். இதனை மனதில் வைத்து தான் பிசிசிஐ பும்ராவுக்கு கேப்டன் பதவியைக் கொடுத்தது. அதற்கேற்ப இந்திய அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தினார் பும்ரா.
வருகின்ற ஜூன் மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடருக்கான வீரர்கள் தேர்வு இன்னும் ஒருசில நாட்களில் வெளியிடப்படும். அப்போது தெரிந்து விடும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் யார் என்று.