இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்கள் வரிசையில் தோனிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ரோஹித் சர்மா. இன்று ரோஹித் சர்மா மிகப்பெரிய வீரராக உருவாகி இருக்கிறார் என்றால் அதற்கு தோனியும் ஒரு காரணம். தொடக்கத்தில் இந்திய அணியில் இளம் வீரராக ரோஹித் சர்மா வந்த போது, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் பார்ட் டைம் ஸ்பின் பௌலராக செயல்பட்டார். ஆனால் தோனி தான் இவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினார். பிறகு இந்தியாவின் மிகச்சிறந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக மாறி தோனியின் எதிர்ப்பார்ப்பை ரோஹித் பூர்த்தி செய்தார்.
கடந்த ஆண்டு டி20 உலக்கோப்பையை வென்ற கையோடு ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். ஆனால் டெஸ்ட் தொடரில் ரன் குவிக்கத் தடுமாறி வந்தார் ரோஹித். மேலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்தியா இவரது தலைமையின் கீழ் இழந்தது.
தோல்விப் பாதையில் இருந்து மீண்டு வந்த ரோஹித் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய கேப்டனாக வென்றெடுத்தார். பிறகு ஐபிஎல் தொடர் தொடங்கியதும் மும்பை அணிக்காக தொடக்க வீரராக விளையாடி வருகிறார். டெஸ்ட் கேப்டன்சி குறித்த தகவல்கள் தீயாய் பரவி வந்த நிலையில், தற்போது திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித். ஆனால் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் எனவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
2013 ஆம் ஆண்டிற்கு பிறகு பல ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வந்த இந்தியாவிற்கு அடுத்தடுத்து 2 ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தார் ரோஹித். கேப்டனான பிறகு சொந்த சாதனைகளுக்கு இடம் கொடுக்காமல், அதிரடியாக விளையாடி வந்தார். டெஸ்ட் போட்டியில் மட்டும் சற்று தடுமாறி வந்த நிலையில் திடீரென ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
ஓய்வு குறித்து அறிவிக்கும் போது அவரது வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய தோனி பற்றி ஏதும் கூறாதது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது. ஆனால் தோனியைப் பின்பற்றியே ரோஹித்தும் ஓய்வை அறிவித்தார் என தோனி ரசிகர்கள் சமூக ஊடகங்களில் புகழ்ந்து வருகின்றனர். 2019 உலகக்கோப்பை முடிந்த பிறகு, தோனி அடுத்த ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
2020 ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரவு 7:29 மணிக்கு தனது ஓய்வை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் தோனி. தற்போது ரோஹித் சர்மாவும் தோனி குறிப்பிட்ட அதே நேரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார். நேற்று இரவு 7:29 மணிக்கு ரோஹித் சர்மாவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓய்வை அறிவித்தார். தோனியை மதிப்பதால் தான் ரோஹித்தும் அதே நேரத்தை தேர்ந்தெடுத்து ஓய்வை அறிவித்தார் என தோனியின் ரசிகர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவுக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ரோஹித் 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்களுடன் 4,301 ரன்களைக் குவித்துள்ளார். இந்திய மைதானங்களில் சிறப்பாக விளைய்டிய ரோஹித் இங்கிலாந்து தவிர்த்து மற்ற நாடுகளில் பெரிதாக ரன்களைக் குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்ப ஓர் இளம் வீரரைத் தான் பிசிசிஐ தேர்ந்தெடுக்கும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.