
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா சமீபத்தில் ஓய்வு பெற்றார். பிசிசிஐ அடுத்த கேப்டனை தேடி வரும் நிலையில், ரோஹித் சர்மாவின் தொடக்க ஆட்டக்காரர் இடத்தை நிரப்பப் போவது யாரென்ற கேள்வியும் எழுந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரருக்கான இடத்தை பிசிசிஐ புதுமுக வீரருக்கு கொடுக்குமா அல்லது அனுபவ வீரரை களமிறக்குமா என கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் யஷஷ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கப் போகும் வீரர் யாராக இருக்கும் என்று அலசுகிறது இந்தப் பதிவு.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கே.எல். ராகுல் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி சிறப்பாக விளையாடினார். கே.எல்.ராகுலுக்கு தொடக்க வீரராகும் வாய்ப்பு கிடைத்தால், மிடில் ஆர்டரில் அவரது இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வி எழும். ஜெய்ஸ்வாலுடன் சுப்பன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவும் அதிக வாய்ப்புள்ளது. தற்போது மூன்றாவது வீரராக களத்திற்கு வரும் கில், ரோஹித் ஓய்வு பெற்றதால் தொடக்க வீரருக்கான வீரர்கள் போட்டியில் இவரும் இருக்கிறார்.
அதேபோல் ஏற்கனவே டெஸ்ட் அணிக்கு தேர்வாகி, சரியான வாய்ப்புகள் கிடைக்காத துருவ் ஜுரெல், சர்ஃப்ரஸ் கான் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்தும் பிசிசிஐ ஆலோசனை செய்யலாம். வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அஜிங்கியா ரஹானே சிறப்பாக பேட்டிங் செய்வார் என்பது பலரும் அறிந்ததே. மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பிடிக்க போராடும் ரஹானேவுக்கும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது என்றே கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் தொடர்கள் மற்றும் ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் சாய் சுதர்ஷன். இவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவரை சேர்க்க வேண்டும் என ஏற்கனவே இந்திய முன்னாள் வீரர்கள் தெரிவித்து உள்ளனர். ஸ்டிரைக்கை மாற்றுவதிலும், அவ்வப்போது பவுண்டரிகளை அடிப்பதிலும் சாய் சுதர்ஷன் சிறப்பாக செயல்படுகிறார். அதோடு இங்கிலாந்தின் காலநிலைக்கு ஏற்ற பேட்ஸ்மேனாகவும் இவர் பார்க்கப்படுகிறார்.
தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான ஜாபர், சாய் சுதர்ஷனக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகையில், “உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் சாய் சுதர்ஷன், வாய்ப்பு கிடைத்தால் ரோஹித் சர்மாவின் தொடக்க ஆட்டக்காரர் இடத்தை கச்சிதமாக நிரப்புவார். ஏற்கனவே இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் அற்புதமான ஆட்டத்தையும் சுதர்ஷன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
ரோஹித் சர்மாவுக்கான மாற்று தொடக்க வீரரை தேர்வு செய்யும் போது பிசிசிஐ, சாய் சுதர்ஷனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுப்பார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் அணியில் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கிடைத்தால், அது இந்தியாவுக்கு தான் பலம்” என்று ஜாபர் கூறினார்.
இந்திய டெஸ்ட் அணியில் ஒருசில தமிழக வீரர்கள் விளையாடி இருந்தாலும், அஸ்வின் அளவிற்கு யாரும் பெரிய சாதனைகளைச் செய்யவில்லை. அஸ்வினுக்கு கிடைத்த வாய்ப்பைப் போல் மற்ற தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு கிடைகவில்லை என்பதும் உண்மை. ஒருவேளை சாய் சுதர்ஷனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தால், நிச்சயமாக அணியின் வெற்றிக்கு சிறப்பாக பங்களிப்பாளர்.