

அடிக்கடி கிரிக்கெட் சார்ந்த விளையாட்டு செய்திகளில் வெள்ளைப் பந்து கிரிக்கெட் , சிவப்பு பந்து கிரிக்கெட் என்று வகைப்படுத்தி செய்திகளை வெளியிடுவார்கள். மறைமுகமாக பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. கிரிக்கெட்டில் ஊறிய ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு பந்தின் வகைப்பாடு மற்றும் அதன் நோக்கம் பற்றி தெரிவது இல்லை. கிரிக்கெட்டில் பந்தின் நிறம் என்பது கவர்ச்சி சார்ந்த விஷயம் அல்ல , அதன் பின்னணியில் அறிவியலும் உண்டு.
கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் பந்தின் நிறம் , ஆட்டத்தின் தன்மை , வீரர்களின் பார்வைத் திறன் , இருள் மற்றும் வெளிச்சத்தில் அதன் தெளிவுத் தன்மை ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. கிரிக்கெட் வரலாற்றின் தொடக்கத்தில் சிவப்பு நிறப் பந்துகளே அதிகாரப் பூர்வமாக போட்டிகளில் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்வரு காலங்களில் போட்டிகளின் வடிவத்திற்கு ஏற்ப பந்தின் வண்ணமும் மாறியது.
பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போதும் சிவப்பு நிறப் பந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயற்கையாக தோலினால் செய்யப்பட்டு, அதன் மீது மெழுகு பூசப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பகலில் வெளிச்சத்தில் விளையாடப்படுவதால், சிவப்பு நிறம் , பச்சை புல் நிறைந்த மைதானத்திலும் , வெள்ளை உடை அணிந்த வீரர்களுக்கு மத்தியிலும் தெளிவாகத் தெரியும்.
இந்த பந்து தொடர்ச்சியாக 5 நாட்கள் வரை கடுமையாக உழைக்கும் தன்மை கொண்டது. ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் இந்த பந்து , தேய்ந்து சுழற் பந்து வீச்சுக்கு ஆதரவாக நன்றாக ஸ்விங் ஆகும் தன்மையுடையது
50 ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டிக்காக தயாரிக்கப்பட்ட பிரத்யேகப் பந்து இது. 1970 களில் கேரி பாக்கர் அறிமுகப்படுத்திய 'வேர்ல்ட் சீரிஸ் கிரிக்கெட்' முறையின் மூலம் ஒருநாள் போட்டிகளில் வெள்ளை நிறப் பந்து அறிமுகப்படுத்தப்பட்டது. பகல் இரவு ஆட்டங்களின் போது , இரவு நேரங்களில் சிவப்பு பந்துகளை ஒளி விளக்குகளின் வெளிச்சத்தில் பார்ப்பது சிரமமாக இருந்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் வண்ண உடைகள் அணிவதால் , சிவப்பு பந்து எளிதாக புலப்படுவதில்லை. இதனால் , ஆட்டக்காரர்களுக்கு ஏற்படும் துயரம் தவிர்க்கவே வெள்ளை பந்து உபயோகப்படுத்தப்படுகிறது. இதன் உழைப்புத் தன்மை குறைவு என்பதால் ஒருநாள் போட்டிகளில் இரண்டு வெள்ளைப் பந்துகள் பயன்படுத்தப்படுகிறது.
வெள்ளைப் பந்து அதிக நேரம் உழைக்காது , சிவப்பு பந்து இரவில் புலப்படாது என்பதால் பிங்க் நிறப் பந்துகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் குறைந்த போது , பகல் இரவுப் போட்டிகள் கொண்டு வரப்பட்டது. 2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டி பிங்க் பந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பந்து பகல் மற்றும் இரவிலும் ஒரே மாதிரி பார்வைக்கு தெரிவது அதன் சிறப்பம்சம் ஆகும்.
கிரிக்கெட் பந்தின் நிறங்கள் , அது விளையாடப்படும் கிரிக்கெட்டின் வடிவங்களை எளிதில் வெளிப்படுத்துகிறது. கிரிக்கெட் பந்தின் நிறுத்தை வைத்தே அது என்ன மாதிரி போட்டி என்பதை எளிதில் அறிந்துக் கொள்ளலாம்.