மனைவியைச் சுமக்கும் போட்டி: பங்கேற்க தயாரா? விதிகள் உண்டு தெரியுமா?

Wife carrying competition
Wife carrying competition
Published on

தற்போதெல்லாம் நகர்ப்பகுதிகளில் அமைந்திருக்கும் குடியிருப்புகளில் ஆண்டுதோறும் நடத்தப்பெறும் பொங்கல் விழா அல்லது கோயில் விழாக் காலப் போட்டிகளில் ‘மனைவியைச் சுமக்கும் போட்டி’ இடம் பெற்று வருகிறது. இப்போட்டியில் ஆண் போட்டியாளர், தனது மனைவியைச் சுமந்து கொண்டு ஓடி, வெற்றிக்கான தூரத்தைக் கடந்து முன்னிலை பெற்றிட வேண்டும். இது நம்மூரில் மகிழ்ச்சிக்கான விளையாட்டு என்றாலும், இவை உலகளாவிய நிலையில் உலகச் சாதனைப் போட்டிகளாகவும் நடத்தப்பெற்று வருகின்றன. 

மனைவியைச் சுமத்தல் (carrying your wife) எனும் போட்டியில் ஆண் போட்டியாளர், தனது பெண் துணையைச் சுமந்து கொண்டு பந்தயத்தில் ஓடுகிறார்கள். இடையில் அமைந்த அல்லது அமைக்கப்பட்டிருக்கும் தடைகள் நிறைந்த பாதையில் ஆண்கள், பெண்களைத் தூக்கிச் சுமந்து கொண்டு அதிவேகமாக செல்வதே இவ்விளையாட்டின் குறிக்கோள். இந்த விளையாட்டு முதலில் பின்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்விளையாட்டில் பல வகையான சுமந்து செல்லும் நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. பாரம்பரியமாக முதுகில் சுமந்து செல்லுதல், தோள்பட்டைக்கு மேல் சுமந்து செல்லுதல், தலைகீழாகத் தனது மனைவியை தனது முதுகில் சுமந்து செல்லுதல் போன்றவைகளும் இருக்கின்றன.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஹாங்காங், இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் பின்லாந்து மற்றும் அருகிலுள்ள சுவீடன், எஸ்த்தோனியா மற்றும் லாத்வியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் மனைவியைச் சுமக்கும் போட்டிகள் நடத்தப்பட்டிருக்கின்றன.

இவ்விளையாட்டுக்கான விதிகள் பற்றித் தெரியுமா?

தொடக்கக் காலத்தில், இப்போட்டிகளின் அசல் பாதையானது வேலிகள் மற்றும் ஓடைகள் கொண்ட கரடுமுரடான, பாறை நிலப்பரப்பாக இருந்தது. ஆனால், அது நவீன நிலைமைகளுக்கு ஏற்றவாறு தற்போது மாற்றப்பட்டுள்ளது. இப்போது முழுப் பாறைகள், வேலிகள் மற்றும் தண்ணீரால் நிரப்பப்பட்ட குளம் போன்ற சில வகையான பகுதிகளுக்கு பதிலாக மணல் உள்ளது.

இதையும் படியுங்கள்:
"இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், கிரிக்கெட் ஒன்றும் அழிந்துவிடாது!" – ஹசன் அலி!
Wife carrying competition

மனைவியைச் சுமக்கும் போட்டி - பின்வரும் விதிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன: அவை;

  1. மனைவியைச் சுமக்கும் போது வேடிக்கையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமான விதியாகும்.

  2. அதிகாரப்பூர்வ பாதையின் நீளம் 253.5 மீட்டர்கள் (832 அடி) கொண்டதாக இருக்கும்.

  3. பாதையில் இரண்டு உலர் தடைகள் மற்றும் ஒரு மீட்டர் ஆழத்தில் தண்ணீர் தடை இருக்கும்.

  4. சுமக்கப்படும் மனைவி உங்களுடையவராக இருக்கலாம் அல்லது அண்டை வீட்டாராகவும் இருக்கலாம் அல்லது நீங்கள் அவரை வெளியிலும் கண்டுபிடித்திருக்கலாம். இருப்பினும், அவருக்கு 17 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இங்கு, மனைவி என்பது பாலினமற்ற சொல்லாகும். இது சுமந்து செல்லும் நபரின் மீது பயன்படுத்தப்படும் என்று பாலின விதி பிப்ரவரி 2023 இல் மாற்றப்பட்டது. 

  5. சுமந்து செல்லும் மனைவியின் குறைந்தபட்ச எடை 49 கிலோகிராம் (108 எல்பி) என இருக்க வேண்டும். அவரது எடை 49 கிலோவுக்குக் குறைவாக இருந்தால், தேவைப்படும் கூடுதல் சுமையைச் சுமக்கக் கூடுதல் எடையைக் கொண்ட ஒரு பை அவரது முதுகில் வைக்கப்படும்.

  6. பங்கேற்பாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

  7. தூக்குபவர் அணியும் பட்டை மற்றும் சுமந்து செல்பவர்கள் அணியும் தலைக்கவசம் ஆகியவை மட்டுமே அனுமதிக்கப்படும் உபகரணங்கள்.

  8. போட்டியாளர்கள் ஒரு நேரத்தில் இரண்டு இணைகளைப் பந்தயத்தில் ஓட விடுவார்கள். எனவே ஒவ்வொரு ஓட்டமும் ஒரு போட்டியாகும்.

  9. ஒவ்வொரு போட்டியாளரும் அவருடைய / அவளுடைய பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ள வேண்டும். மேலும், தேவைப்பட்டால், காப்பீடு செய்து கொள்ளலாம்.

  10. மேலும், மிகவும் பொழுதுபோக்கு இணை, சிறந்த ஆடை, மற்றும் வலுவான சுமப்பவர் என்ற சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.

அனைத்துப் போட்டிகளுக்கும் சர்வதேச விதிகள் அடிப்படையாக இருந்தாலும், ஒவ்வொரு போட்டிக்கும் விதிகள் மற்றும் பரிசுகள் இடத்திற்கேற்ப மாறுபடுகின்றன.

மனைவியைச் சுமக்கும் உலக வெற்றியாளர் போட்டிகள் 1992 முதல் ஆண்டுதோறும் பின்லாந்தில் நடத்தப்படுகிறது. இங்கு வெற்றியாளரின் மனைவியின் எடைக்கு ஈடாகப் பீர் பரிசாக வழங்கப்படுகிறது. ஆனால், நம்மூர் போட்டிகளில் பெண்களைக் கவரும் வகையில், சிறிய அளவிலான சமையல் பாத்திரங்களும், விளையாட்டுப் பொருட்களுமேப் பரிசாக அளிக்கப்படுகின்றன. நல்லவேளை, சோப்பு வைக்கும் டப்பா தரவில்லை…!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com