

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த சில சீசன்களாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் சொதப்பி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஸ்டீபன் ஃபிளெம்மிங் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதனை அடுத்து அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான பணியில் சென்னை அணி நிர்வாகம் இறங்கியது. இதன்படி சுரேஷ் ரெய்னா மற்றும் மைக் ஹஸ்ஸி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சுரேஷ் ரெய்னாவை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக பணியமர்த்த இதுவே சரியான நேரம் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் அடுத்த சீசனில் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா அல்லது விளையாட மாட்டாரா என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கி விட்டது.
கடந்த சீசனில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மூட்டு வலி காரணமாக தொடர் முழுவதுமே அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இந்நிலையில் இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்தி அடுத்த சீசனில் தோனி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இம்பேக்ட் பிளேயராக விளையாட தோனி ஒருபோதும் சம்மதிக்க மாட்டார் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் வணிக முகமாக தோனி பார்க்கப்படுகிறாரா என்ற கேள்வி கடந்த 3 சீசன்களாகவே எழுப்பப்பட்டு வருகிறது. தோனியுடன் விளையாடிய பல வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். ஆனால் சென்னை அணிக்கு தரமான கேப்டனை உருவாக்கும் பொறுப்பை தோனி எடுத்துக் கொண்டதாலும், ரசிகர்களின் விருப்பத்திற்காகவும் அவர் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.
கடந்த சீசனுக்கு முந்தைய சீசன்களில் கடைசி வரிசையில் களமிறங்கி 10-க்கும் குறைவான பந்துகளையே எதிர்கொண்டார். அதிலும் ஒன்றோ அல்லது இரண்டு சிக்ஸர்களை பறக்க விடுவார். என்ன தான் இன்றைய இளம் வீரர்கள் அதிரடி காட்டினாலும், தோனி அடிக்கும் ஒரு சிக்ஸரைக் காண ரசிகர்கள் மைதானத்தில் அதிகளவில் கூடுவர்.
தல தரிசனம் வேண்டியே சென்னை அணியின் ரசிகர்கள் ஐபிஎல் தொடரை தொடர்ந்து பார்த்து வருகின்றனர். ஆனால் கடந்த சீசனில் தோனி விளையாடாததால், அவரை களத்தில் காணும் வாய்ப்பு பறிபோனது.
இந்நிலையில் அடுத்த சீசனிலாவது தோனி விளையாடுவாரா இல்லையா என்ற கேள்விக்கு தற்போது வரை பதில் கிடைக்கவில்லை. இருப்பினும் இம்பேக்ட் பிளேயராக தோனி விளையாட வாய்ப்பே இல்லை என முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சென்னை அணியின் வெற்றிகரமான கேப்டன் தோனி, தன்னை முழுநேர விக்கெட் கீப்பராகவே பார்க்கிறார். அதாவது 20 ஓவர்கள் முழுமையாக களத்தில் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும் என்பதே அவருடைய விருப்பம். எக்காரணத்தைக் கொண்டும் இம்பேக்ட் பிளேயராக விளையாட மாட்டேன் என என்னிடம் தனிப்பட்ட முறையில் பல தடவை சொல்லியிருக்கிறார். ஆகையால் அடுத்த சீசனில் தோனி இம்பக்ட் பிளேயராக விளையாட மாட்டார்” என பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
மூட்டு வலி காரணமாக ஐபிஎல் தொடரின் கடந்த சீசனின் ஒரு போட்டியில் கூட தோனி களமிறங்கவில்லை. ஒருவேளை இம்பேக்ட் பிளேயராக விளையாட நினைத்திருந்தால், அவர் கடந்த சீசனிலேயே விளையாடி இருப்பார். ஆகையால் 2027 ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது சந்தேகம் தான் எனக் கூறப்படுகிறது.
ஆனால் கடந்த சீசனைப் போலவே சென்னை அணியின் வீரர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை தோனி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு விக்கெட் கீப்பிங் செய்ய சென்னை அணியில் சஞ்சு சாம்சன் இருப்பதால், தோனி மீண்டும் விளையாடுவது சந்தேகம் தான்.