டிச 24, செவ்வாய்க் கிழமை, நேற்று வதோதராவில் உள்ள கொட்டாம்பி மைதானத்தில் இந்தியா மற்றும் மே.இந்திய தீவுகள் மகளிர் அணியினர் மோதும் தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. இம்முறை டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கில் ஸ்மிருதியும் பிரத்திகா ராவலும் களமிறங்கினர். ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இருவரும் ஆட்டத்தில் சிறிது சிறிதாக வேகம் எடுக்க துவங்கினர்.16 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை கடந்தது. ஸ்மிருதி மந்தனா தொடர்ச்சியாக டி20 மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தனது 5 வது அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். இந்த தொடரில் இது அவரது 2 வது அரைசதம் ஆகும். ஸ்மிருதி 2 ரன்களை எடுக்க முயற்சிக்க மறுபுறம் பிரத்திகா ஓடி வர மறுக்க , பாவமாக 53 ரன்களில் ஸ்மிருதி ரன் அவுட் ஆக்கப்பட்டார்.
அடுத்து ஹர்லீன் தியோல் - பிரத்திகா உடன் கூட்டு சேர்ந்தார்.இதன் பின்னர் இந்த ஜோடி ஆட்டத்தின் வேகத்தை குறைத்து தடுப்பு ஆட்டத்தை ஆடினர். நிதானமாக ஆடிய பிரத்திகா தனது முதல் அரைசதத்தை அடித்து 78 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்லின் தியோல் (115) சிறப்பாக விளையாடி தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். மிடில் ஆர்டரில் ஜெமிமாவும் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 358/5 என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. இந்த ரன்கள் இந்திய அணி இரண்டாவது முறை இந்தியாவில் எட்டியுள்ள அதிகபட்ச ரன்கள் ஆகும். மே.இந்திய தீவுகள் சார்பில் டீண்டிரா, பிளட்சர், கியானா , சைதா ஜேம்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை சாய்த்தனர்.
அடுத்து சேசிங்கை தொடங்கிய மே.இந்திய தீவுகள் அணி சார்பில் கேப்டன் ஹெய்லி, கியானா ஜோசப் களமிறங்கினர். ஹெய்லி மட்டும் அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க தொடங்கினார். ஆனால், அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. அவருக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைக்க வில்லை மறுபுறம் விக்கெட்டுகள் அவ்வப்போது விழுந்து கொண்டே இருந்தன. கெம்பெல் மட்டும் சிறிது நேரம் தாக்கு பிடித்து 38 ரன்கள் எடுத்தார். தனியாக போராடிய ஹெய்லி தனது 7 வது சதத்தை பூர்த்தி செய்தார்.
ஹெய்லி 106 ரன்களை கடந்த போது ஜெமிமாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 46.2 ஓவர்களில் மே.இந்திய தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது. இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான ஒரு வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி சார்பில் பிரியா மிஸ்ரா 3 விக்கட்டுகளையும் பிரத்திகா, தீப்தி, சாது ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
இரண்டாவது போட்டியின் வெற்றியின் மூலம் மே.இந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று கைப்பற்றியது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி தனது முதல் சதத்தை பதிவு செய்த ஹர்லின் தியோல் ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடரின் இறுதிப் போட்டி டிச.27 காலை 9.30 மணிக்கு அதே மைதானத்தில் தொடங்கும்.