இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் ஜாம்பவானாக திகழ்பவர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் உலகின் சிறந்த டெஸ்ட் போட்டி ஆல்ரவுண்டராக பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியதிலும் பல சாதனைகளை செய்து இருக்கிறார். இந்திய பந்துவீச்சாளர் ஒருவர் அதிக 5 விக்கெட்டுகளை (37) வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். அவரது 537 டெஸ்ட் விக்கெட்டுகளில் 383 விக்கெட்டுகள் இந்தியாவில் கிடைத்ததால், உள்நாட்டில் அவரது ஆதிக்கம் ஈடு செய்ய முடியாததாகும்.
ஆசியாவின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக அஸ்வின் திகழ்கிறார். இந்திய சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளே 419 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
'எனது சாதனையை (டெஸ்டில் 619 விக்கெட்டுகள்) அஸ்வின் முறியடிப்பார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் ஓய்வு முடிவை அறிவித்தது வருத்தம் அளிக்கிறது' என்று இந்திய அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அணில் கும்ப்ளே இந்திய அணிக்காக தன்னுடைய 20 வது வயதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 18 ஆண்டுகள் வரை விளையாடினார். ஆனால் அஸ்வின் தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 25வது வயதில் தான் விளையாடினார். அஸ்வின் 13 ஆண்டுகள் தான் இந்திய அணிக்காக விளையாடியிருக்கிறார்.
கும்ப்ளே மொத்தமாக இந்திய அணிக்கு 132 டெஸ்ட் போட்டிகளும் 271 ஒரு நாள் போட்டிகளும் விளையாடி இருக்கிறார். ஆனால் அஸ்வின் இந்திய அணிக்காக 106 டெஸ்ட் போட்டிகளும் 116 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியாவுக்காக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மறுபுறம், அனில் கும்ப்ளே 132 போட்டிகளில் 619 விக்கெட்டுகளை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.
ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அனில் கும்ப்ளே இருவரும் ஒரு டெஸ்ட் போட்டியில் 8 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தினர. ஆனால் கும்ப்ளே ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் 7/59, அனில் கும்ப்ளேவின் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள் 10/74. அதாவது ஒரு டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்திய சாதனையை அனில் கும்ப்ளே வைத்திருக்கிறார்.
அஸ்வினின் 3503 டெஸ்ட் கிரிக்கெட் ரன்களில் 6 சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் அடங்கும். மேலும் டெஸ்ட் கிரிகெட்டில் 3,000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் என்ற இரட்டையை எட்டிய 11வது வீரர் ஆவார்.
அனில் கும்ப்ளே, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து அரைசதங்கள் மற்றும் ஒரு தனி சதத்தின் உதவியுடன் 2,506 ரன்களை குவித்தார்.