மகளிருக்கான 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் செப் 30 அன்று உற்சாகமாக தொடங்கியது. 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் 8 நாடுகளை சேர்ந்த அணியினர் பங்கு கொள்கின்றனர். உலகக் கோப்பை தொடரின் முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்ஸபரா மைதானத்தில் தொடங்கியது. தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவும் இலங்கை அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது போட்டி அக் 1, நேற்று நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் நியூசிலாந்து அணியும் மோதின. இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீராங்கனையாக ஹீலியும் போப் லீட்ச்பில்ட்டும் இறங்கி அதிரடி காட்டினர். ஹீலி 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். போப் மிகவும் அதிரடியாக 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களை பறக்க விட்டு 45 ரன்கள் குவித்து வெளியேறினார்.
அதன்பிறகு வந்த எல்லிஸ் பெர்ரி (33) மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மூன்லி, அன்னாபெல் சதர்லேண்ட் எல்லாம் பந்துக்கு வலிக்காமல் விளையாடி வெளியேறினர். ஆஸியின் ரன்ரேட் வெகுவாக குறைந்து கொண்டே இருந்தது. இந்த நேரத்தில் களமிறங்கி ஆட்டத்தின் போக்கை ஆஷ்லே கார்டனர் மாற்றினார். 6 வது விக்கட்டுக்கு களமிறங்கிய இவர் நியூசியின் பந்து வீச்சுகளை வெளுத்து வாங்கினார். ஆஸி அணியின் வெற்றிக்கு காரணமே யார் எப்போது நன்றாக விளையாடுவார்கள் என்பதை கணிக்க முடியாது என்பது தான்.
ஆஷ்லே 83 பந்துகளை எதிர்கொண்டு 16 பவுண்டரிகளையும் 1 சிக்ஸரையும் பறக்க விட்டு 115 ரன்களை குவித்து , ஆஸி அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். அதன்பிறகு வந்த ஆஸி அணியினர் தங்கள் பங்கிற்கு முடிந்த அளவிற்கு ரன்களை சேர்த்தனர். 49.3 ஓவரில் ஆஸி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 என்ற வலுவான ஸ்கோரை எட்டியது. நியூசி அணியின் ஜெஸ் கேர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.
327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி நியூசி அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிலிம்மர் களமிறங்கினார்கள். இவர்களின் ஆரம்பமே புஸ்வானமாக இருந்தது. துவக்க ஜோடிகள் டக் அவுட்டாகி வெளியேறினர். அமிலியா கேர் மற்றும் சோபி டிவைன் இணைந்து அணியை மீட்டனர். அமிலியா 33 ரன்கள் எடுத்து வெளியேறினார். சோபி(112) மட்டும் நிலைத்து நின்று ஆடி 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களைப் பறக்க விட்டு சதமடித்தார்.
அதன் பின்னர் வந்த புரூக் ஹாலிடே 28, மேடி கிரின் 20, இஸ்சி ஹசே 28 என குறைவான ரன்களை குவிக்க ஆட்டம் ஆஸி அணியின் வசம் சென்றது. அதன் பிறகு வந்தவர்கள் நிற்பதற்கே தடுமாற 43.2 ஓவரில் மொத்த விக்கட்டுக்களையும் இழந்து 237 ரன்கள் மட்டுமே நியூசி அணி குவித்தது. இதன் மூலம் 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி பெரிய வெற்றியை பெற்றது. ஆஸியின் அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் சோபி மூலினக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். சதம் அடித்து ஆஸி அணியின் வெற்றிக்கு காரணமான ஆஷ்லே ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.