

நேற்று (நவ.2) நவி மும்பையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் பட்டம் பெற்றது. எதிர்பார்ப்பு மிகுந்த இந்த போட்டி தொடங்கும் முன் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வார்ட் , "இந்திய அணியின் ரசிகர்களை அமைதிப்படுத்துவதே எங்களின் வேலையாக இருக்கும்" என்று, முன்பு ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறிய அதே வார்த்தையை கூறி, உளவியல் தாக்குதலை தொடுத்தார்.
லாராவின் உளவியல் தாக்குதல் இந்திய கேப்டன் ஹர்மன்பிரித் கவுரிடம் பலிக்கவில்லை. தனது பொறுப்பை உணர்ந்து , பக்குவப்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தி, தென் ஆப்பிரிக்க அணியின் இறுதி விக்கட்டான நாடின் டி கிளார்க் அடித்த பந்தை கேட்ச் பிடித்து, வெளியேற்றினார். இந்திய அணியின் வெற்றி தருணம் கேப்டன் ஹர்மன்பிரித் கைகளில் மலர்ந்தது. இந்திய ரசிகர்களுக்கு ஆரவாரமிக்க மகிழ்ச்சியை பரிசளித்த இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில், முதல்முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த வெற்றி சாதாரணமானது அல்ல... கடந்து வந்த பாதை கரடு முரடானது கடினமானது... இதற்கு பின்னால் பலரது அசாதாரண உழைப்பும், நீண்ட வருட கனவும் உள்ளது.
வெற்றித் துவக்கம் சாந்தா ரங்கசாமி:
இன்று இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையை வென்று சாம்பியன் ஆகியுள்ளது என்றால் , அதற்கு விதை மிதாலி ராஜ் போட்டது என்பதை மறுக்க முடியாது. 1973 இல் தொடங்கப்பட்ட இந்திய மகளிர் கிரிக்கட் அணி ஆரம்பத்தில் முன்னணி அணியாக இல்லா விட்டாலும் வேகவேகமாக முன்னேறி வந்துள்ளது.1978 ஆம் ஆண்டு சாந்தா ரங்கசாமி மே.இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றியை பெற்றுத் தந்தார். பிசிசிஐ யின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற சாந்தா, இந்திய அணி சார்பில் முதல் சதம் அடித்தவர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
அந்த காலக் கட்டத்தில் மகளிருக்கான கிரிக்கெட் போட்டிகள் மிகவும் குறைவானது என்பதால் பல சாதனைகள் படைக்க முடியாமல் போனது. தொடங்கிய காலம் முதல் இன்று வரை உலகில் பல கிரிக்கெட் அணிகள் அதிகம் முன்னேறாத அணிகளாகவே இருந்தாலும், இந்திய அணி இன்று வரை முன்னணியில் உள்ளது.
இந்திய அணியின் வெற்றி முகம் மிதாலி ராஜ்:
இந்திய அணியை வெற்றிகரமாக மாற்றியதில் மிதாலி ராஜ்ஜின் பங்கு மகத்தானது. இவர் 234 ஒருநாள் போட்டிகளில் பங்கு பெற்று 7805 ரன்களையும் குவித்து, உலகிலேயே அதிக ரன்கள் குவித்த வீராங்கனையாக முதலிடத்தில் உள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் மிதாலி ராஜ், 1321 ரன்கள் குவித்து அதிலும் முன்னணியில் இருக்கிறார். 50.68 என்ற அவரது பேட்டிங் சராசரி இன்று வரை மிரள வைக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகளிர் கிரிக்கெட் பக்கம் திருப்பியது மிதாலியின் சாதனைகளில் முக்கியமான ஒன்று.
ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களையும் 64 அரை சதங்களையும் அடித்த முதல் வீராங்கனையும் மிதாலி தான். 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை கொண்டு சென்ற பெருமையும் அவரையே சாரும். 155 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்று 89 வெற்றிகளைப் பெற்றுள்ளார். இது மகளிர் ஒருநாள் போட்டிகளில் ஒரு கேப்டன் பெற்ற அதிகபட்ச வெற்றியாகும்.
2025 தொடக்கத்தில் தடுமாறிய இந்தியா:
இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணியை வென்று தொடரைக் கைப்பற்றி இந்திய அணி நம்பிக்கை ஊட்டினாலும், அடுத்து வந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் கோட்டை விட்டது. இந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி லீக் சுற்றுகளில் சில அணிகளுக்கெதிரான போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், தென் ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியா , இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களை கலக்கத்தில் விட்டது.
2025 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு நுழைவு:
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் சபாலி வர்மாவை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. 338 என்ற இமாலய ஸ்கோரை விரட்டினால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற தருணத்தில், சரிந்த ஆட்டத்தின் போக்கை ஜெமிமா ரோடெரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் ஆகியோர் மாற்றிக் காட்டினர். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துசென்றார்
ஜெமிமா:
வெற்றியில் ஜெமிமா ஆனந்த கண்ணீர் விட 150 கோடி மக்களும் அவரை கொண்டாடி தீர்த்தனர். ஜெமிமாவின் உறுதியான ஆட்டம், அவரது தன்னம்பிக்கை, நீண்ட கால கனவு எல்லாம் இந்திய அணியை தலைநிமிர வைத்தது. ஜெமிமா ஏதோ சாதரணமாக ஒரு சாதனையை செய்யவில்லை... 7 முறை சாம்பியனான ஆஸி அணியின் கையில் பையை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி இருக்கிறார்! இன்று இந்தியா உலக சாம்பியன் பட்டம் பெற அரையிறுதியின் வெற்றிதான் முழுமையான காரணம்.
நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா:
மிதாலி ராஜ் உருவாக்கிய பாதையில் இன்று ஸ்மிருதி மந்தனா வெற்றிகரமாக பயணிக்கிறார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை 5322* ரன்கள் மற்றும் 14 சதங்கள் அடித்து , உலகின் நம்பர் 1 வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். இதை விட முக்கியமான விஷயம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20 போட்டிகளில் 3 சதங்களையும் 974 ரன்களையும் குவித்துள்ளார். இறுதிப் போட்டியிலும் 45 ரன்கள் குவித்து அருமையாக துவக்கத்தை கொடுத்துள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் ஒரு சதத்துடன் 434 ரன்களை கடந்து அணியின் வெற்றிக்கு முதுகெலும்பாக உள்ளார்.
கேப்டன் ஹர்மன்பிரித்:
இறுதிப் போட்டிக்கு முன்னர் கேப்டன் ஹர்மன்பிரித் 47 ஒருநாள் போட்டிகளில் தலைமை தாங்கி 29 போட்டிகளில் வெற்றி பெற்று சிறந்த கேப்டன் என்று நிரூபித்துள்ளார். மேலும் சிறந்த பேட்ஸ் உமனாக 4389 ரன்களையும், 7 சதங்களையும் அடித்துள்ளார். இறுதிப் போட்டியில் ஷபாலி வர்மா 87 ரன்கள் அடித்தும், 2 விக்கெட்டுகளை சாய்த்தும் வெற்றியில் பங்காற்றி ஆட்ட நாயகி விருதைப் பெற்றார்.
தீப்தி ஷர்மா:
இதே போல் தீப்தி ஷர்மாவும் இந்த தொடரில் 200 ரன்களை குவித்தும் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இறுதிப் போட்டியில் கூட 58 ரன்கள் குவித்து , தென் ஆப்பிரிக்க அணியின் 5 விக்கட்டு களையும் எடுத்து அணியின் வெற்றியை தன் தோளில் சுமந்தார். அதனாலேயே உலகக் கோப்பை தொடர் நாயகி விருதும் தரப்பட்டது.
இறுதி நேரத்தில் அதிவேகமாக 34 ரன்களை குவித்த ரிச்சா கோஷ் அதிகமாக பாராட்டப்பட வேண்டியவர். மேலும் ரேணுகா சிங் , சாரனி , அமன்ஜோத் கவுர், ராதா யாதவ் , கிரந்தி கவுட் உள்ளிட்ட மற்ற அனைவரின் குழு செயல்பாடுகளும் உலகக் கோப்பையை வசமாக்கின.
இந்த மாபெரும் வெற்றி படைத்தது ஒரு சரித்திரம்... இன்னும் நிறைய இளம் பெண்களுக்கு இது தருமே உத்வேகம்!