இந்தியா மற்றும் இலங்கையில் 2026-ம் ஆண்டு பத்தாவது டி20 உலகக்கோப்பையை, சூரியகுமார் யாதவ் (35) தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. 50 ஓவர் ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி, டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் தனக்கான சரியான களம் டி20 தான் என்று மனம் திறந்து பேசியுள்ளார். மேலும் இதில் தான் பிரகாசிக்க முடிவதாகவும் கூறியுள்ளார்.
டி20 போட்டிகளில் கிரிக்கெட் மைதானத்தின் நான்கு புறங்களிலும் பந்தை விளாசுவதால் 'மிஸ்டர் 360 டிகிரி வீரர் 'என அழைக்கப்படும் வீரராக இருக்கும் சூரியகுமார் யாதவ் 113 டி20 போட்டிகளில் பங்கேற்று 4 சதம் 25 அரை சதம் உட்பட 3272 ரன்கள் குவித்துள்ளார். இவருடைய பேட்டிங் சராசரி 36.35 மற்றும் ஸ்டிரைக் ரேட் 162.94 ஆக உள்ளது.
2024-ம் ஆண்டு டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சூரியகுமார் இந்தியாவிற்கு பங்கேற்ற 52 போட்டிகளில் 42 வெற்றி தேடி தந்ததோடு பத்தாவது டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார்.
சவாலான ஒருநாள் போட்டிகள்:
சிவப்பு பந்து கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக 10 முதல் 12 ஆண்டுகள் ரஞ்சிக்கோப்பையில் விளையாடிய அனுபவம் இவருக்கு உண்டு. இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் சோபிப்பது சவாலாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெஸ்டில் விளையாட பிடிக்கும் என்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்சில் மட்டும் விளையாடி 8 ரன்கள் மட்டுமே எடுக்க வாய்ப்பு கிடைத்தது. நம் தலைவிதியில் என்ன எழுதி இருக்கிறதோ அதுதான் வாழ்வில் நடக்கும். 10 முதல் 12 ஆண்டுகள் மும்பை அணிக்காக ரஞ்சிக்கோப்பையில் சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாடிய பிறகு ஒயிட்பால் கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தாலும் ஒரு நாள் போட்டியில் சாதிக்க முடியவில்லை.
என்னுடைய ஆட்ட பாணிக்கு ஏற்றதாக அதிரடி விளையாட்டில் புகழ்பெற்ற டி20 தான் உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் துவக்கத்தில் விக்கெட் சரிந்தால் டெஸ்ட் கிரிக்கெட் போல மந்தமாகவும் ,நடுவில் ஒரு நாள் போட்டிக்கு ஏற்ற வகையில் ஸ்டிரைக் ரேட் உயர்த்த விளையாடி, கடைசி கட்டத்தில் டி20 போல விளாச வேண்டும்.
என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை .ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாட முயற்சி செய்தாலும் சவாலானதாகவே இருந்தது .50 ஓவர் 2023 உலகக் கோப்பை தொடரில் விளையாடினேன். 2024, 2026 டி20 உலக கோப்பை தொடருடன் ஒப்பிடும்போது முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. ஆகவே எனக்கேற்ற களமாக T20 இருப்பதால் வானத்தில் பறப்பதாக மனம் திறந்து சூரியகுமார் யாதவ் கூறியுள்ளார்.
பயிற்சியாளர் கௌதம் காம்பீருடன் அண்ணன்-தம்பி போன்ற உறவு இருப்பதாகச் சூரியகுமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். "நாங்கள் இருவரும் இணைந்து உலகக்கோப்பைக்காகப் பரிந்துரை செய்த 15 வீரர்களில் 14 பேரை ஒருமனதாகத் தேர்வு செய்தோம். இந்த ஒருங்கிணைப்பே நாங்கள் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தது," என்று அவர் கூறியுள்ளார்.