

உலகம் முழுவதும் விளையாட்டுகள் மனிதர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான பங்கைக் கொண்டுள்ளன. அந்த வகையில் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற பிரபலமான விளையாட்டுகள் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால், உலகில் மிகவும் விசித்திரமான மற்றும் நம்ப முடியாத அளவுக்கு வித்தியாசமான விளையாட்டுகளும் விளையாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு விளையாட்டுப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
அந்த விசித்திரமான விளையாட்டின் பெயர் 'செஸ் பாக்ஸிங்' (Chess Boxing). இந்த விளையாட்டு முதலில் கேட்கும்போது நமக்கு சிரிப்பையும் ஆச்சரியத்தையும் தரும். ஏனெனில் இது புத்திசாலித்தனத்தை சோதிக்கும் சதுரங்கம் (Chess) மற்றும் உடல் வலிமையை சோதிக்கும் குத்துச்சண்டை (Boxing) என இரண்டு முற்றிலும் மாறுபட்ட உலகங்களை இணைக்கிறது
செஸ் பாக்ஸிங் முதன்முதலில் 2003 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டை உருவாக்கியவர் டச்சு கலைஞர் Iepe Rubingh.
இது முதலில் ஒரு காமிக் புத்தகத்தில் தோன்றிய கருத்தாக இருந்தது. பின்னர் அதை உண்மையான விளையாட்டாக மாற்றி உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்.
இந்த விளையாட்டு எப்படி நடக்கிறது என்று பார்ப்போம். ஒரு போட்டி மொத்தம் 11 சுற்றுகளாக நடைபெறும். அதில் 6 சுற்றுகள் சதுரங்கம், 5 சுற்றுகள் குத்துச்சண்டை. போட்டி சதுரங்கத்துடன் தொடங்கும், பின்னர் குத்துச்சண்டை, மீண்டும் சதுரங்கம் என்று மாறி மாறி நடைபெறும். ஒவ்வொரு சதுரங்க சுற்றும் 4 நிமிடங்கள் நீடிக்கும்; குத்துச்சண்டை சுற்றுகள் 3 நிமிடங்கள்.
இந்த விளையாட்டின் மிகப்பெரிய சவால் என்னவென்றால், ஒரு வீரர் தனது மூளையையும் உடலையும் ஒரே நேரத்தில் கட்டுப்படுத்த வேண்டும். குத்துச்சண்டையில் கடுமையாக சண்டையிட்டு வந்தவுடன், உடனே அமைதியாக அமர்ந்து சதுரங்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மிகுந்த மன உறுதி மற்றும் உடல் கட்டுப்பாடு தேவை.
வெற்றி பெறுவதற்கான விதிமுறைகளும் சுவாரஸ்யமாக உள்ளன. ஒருவர் சதுரங்கத்தில் Checkmate கொடுத்தாலும் வெற்றி பெறலாம். அல்லது குத்துச்சண்டையில் எதிரியை Knockout செய்தாலும் வெற்றி பெறலாம். இதனால் எந்த துறையில் வல்லவர் என்றாலும், அந்த திறனை பயன்படுத்தி வெற்றியைப் பெற முடியும்.
இந்த விளையாட்டு தற்போது உலகின் பல நாடுகளில் பரவலாக நடைபெற்று வருகிறது. ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் கூட செஸ் பாக்ஸிங் கிளப்புகள் உருவாகி வருகின்றன. இந்தியாவில் கூட சில இளைஞர்கள் இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த விளையாட்டு நமக்கு ஒரு முக்கியமான பாடத்தையும் கற்றுக்கொடுக்கிறது. வெற்றி என்பது உடல் வலிமையாலோ அல்லது அறிவாலோ மட்டும் கிடைப்பதில்லை; இரண்டின் சமநிலையாலும் கிடைக்கும் என்பதையே இது காட்டுகிறது. வாழ்க்கையிலும் இதே உண்மை தான்; அறிவும், உடல் ஆரோக்கியமும் சமமாக இருந்தால் தான் முழுமையான வெற்றி கிடைக்கும்.