இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீர்ர் பஜ்ரங் புனியா, தமக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதை பிரதமர் வீட்டருகே விட்டுச் சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பஜ்ரங் புனியா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பத்மஸ்ரீ விருதை ஒப்படைக்க காத்திருந்தேன். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை. எனவே அவரது வீட்டின் அருகே எனக்கு கிடைத்த பத்மஸ்ரீ விருதை விட்டுவிட்டு வந்துவிட்டேன். அதை திரும்ப எடுத்துச் செல்ல எனக்கு மனமில்லை.
மல்யுத்த வீராங்கனைகளுக்காக நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால், எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் பத்மஸ்ரீ விருதை வைத்திருக்க எனக்கு தகுதியில்லை என்று கருதினேன். இதைத் தொடர்ந்து விருதை பிரதமரிடம் திருப்பி அளிக்க முடிவு செய்தேன். ஆனால், பிரதமரை என்னால் சந்திக்க முடியவில்லை. அவரை சந்திக்க எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஒருவேளை பிரதமர் பிஸியாக இருக்கலாம். எனவே விருதையும், பிரதமருக்கு எழுதிய கடிதத்தையும் அவரது வீட்டிற்கு அருகில் விட்டுவிட்டு வந்துவிட்டேன். விருதை எடுத்துச் செல்ல எனக்கு மனமில்லை என்றார் பஜ்ரங் புனியா.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்தல் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் சஞ்சய் சிங்கை எதிர்த்து காமன்வெல் போட்டிகளில் தங்கம் வென்ற அனிதா ஷிரோன் போட்டியிட்டார். ஆனால், அவர் சஞ்சய் சிங்கிடம் தோல்வி அடைந்தார்.
பிரிஜ்பூஷன் ஆதரவாளரான சஞ்சய் சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த சாக்ஷி மாலிக், அதிருப்தியில் மல்யுத்த விளையாட்டிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இனி என்னை மல்யுத்த மேடையில் பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தல் கடந்த ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி நடைபெற வேண்டும். ஆனால், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக செப்டம்பர் 25 வரை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த தேர்தல் கடந்த ஜூன் மாதமே நடைபெற்று இருக்கவேண்டும்.
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் புஷன் மீது சரமாரியாக பாலியல் புகார்கள் எழுந்தன. அவரை நீக்க வேண்டும் என்றும் மல்யுத்த வீர்ர், வீராங்கனைகள் தில்லி ஜந்தர் மந்தரில் நீண்டநாள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகுர், பஜ்ரங் புனியா, சாக்ஷிமாலிக், உள்ளிட்ட வீர்ர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ்பூஷனோ அவரது குடும்பத்தினரோ அல்லது ஆதரவாளர்களோ போட்டியிட மாட்டார்கள் என்று உறுதியளித்தார். ஆனால், தேர்தலில் பிரிஜ் பூஷன் ஆதரவாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.